சிறை வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள், கைதிகளை போல அழைத்து வரப்பட்டார்கள் என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழையும்போது, கோஷத்துடனேயே, ஸ்டாலின் அணியினர் உள்ளே வந்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், செம்மலைதான் அதிமுகவின் புதிய கொறடா என மதுசூதனன் உத்தரவு பிறப்பித்தார். இதனால், பரபரப்பு மேலும் தொற்றி கொண்டது.
ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் செம்மலை, புதிய கொறடா என்றால், அவர் உத்தரவை மீறும் எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும்.

இந்த நிலையில் செம்மலை, தனது அணி சார்பாக பேசுவதற்கு சட்டப்பேரவையில் வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுத்ததால், சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்ட்டது.
அப்போது, செம்மலைக்கு வாய்ப்பு தரவேண்டும் என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். ஜனநாயக முறைப்படி ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். நடுநிலை தவற கூடாது என மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள், ரகசிய வாக்கெடுப்பையே விரும்புகின்றனர். வேலூர் சிறை கைதிகள் போல எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
ஓ.பி.எஸ். உறுப்பினர்களுக்கு ஆதரவாக, மு.ஸ்.ஸ்டாலின் ஆவேசமாக பேசியதால், சட்டப்பேரவையில் எதிரணியில் அமர்ந்து இருந்த சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள், அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்துவிடாது பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன், அப்படி இருந்தால், எதிர்க்கட்சி தலைவரான, அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ள மு.க.ஸ்டாலினின் வாகனத்தை போலீசார், சோதனை செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், பலமுறை வலியுறுத்தியும், செவி சாய்க்காமல், மு.க.ஸ்டாலின் வாகனத்தை சோதனை செய்த காவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தினார்.
