கெத்தா நடந்து வர்றார்! கேட்டை எல்லாம் திறந்து வர்றார்! ரஜினிக்காக பாட்டெழுதிய ஸ்டாலின் 
(Stalion's strong criticism on Rajini)


*    ஜம்மு - காஷ்மீரில் ஓமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். 
-    பிரியங்கா காந்தி (காங்., பொதுசெயலாளர்)

*    கேரளாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் அறுபது வயதை கடந்தவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் 60 வயதை கடந்த மக்களின் எண்ணிக்கை 48 லட்சமாக உயர்ந்துள்ளது. அதில் பதினைந்து சதவீத மக்கள், எண்பது வயதை கடந்தவர்கள். அதில் ஆண்களை விட  பெண்களே அதிகம் உள்ளனர். பெரும்பாலானோர் விதவைகள்.
-    தாமஸ் ஐசக் (கேரள நிதி அமைச்சர்)

*    நான் கண்டுபிடித்த, மிக உயர் வெப்பநிலையை தாங்கும் ‘கோபோனியம் அலாய்’ குறித்து அறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள் என்னை சந்தித்தனர். நாசாவில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் எதையும் என் தாய்நாடான இந்தியாவிற்கு செய்யவே நான் விரும்புகிறேன். 
-    கோபால்ஜி (அறிவியல் கண்டுபிடிப்பாளர்)
*    பிரதமர் ஆறு மாதங்களுக்குள்  அடித்து தூக்கி எறியப்படுவார்! என்கிறார் ராகுல்காந்தி. பிரதமரைப் பற்றி ராகுல் இவ்வாறு இழிவாக பேசியது போல், யார் மீது பா.ஜ.க. தலைவர்கள் தனி நபர் தாக்குதலை நடத்தியது இல்லை. மிகவும் மோசமான இந்த பேச்சை ராகுல் வாபஸ் பெற வேண்டும். 
-    ஹர்ஷவர்த்தன் (மத்தியமைச்சர்)

*    ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசியபோது ‘தேசிய மக்கள் தொகை பதிவேடு விஷயத்தில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்பி வருகின்றனர்’ என குற்றம் சாட்டினார். இந்த நிலையில், ‘பொய்’ எனும் வார்த்தை பாராளுமன்ற நடைமுறைகளுக்கு ஏற்றதல்ல என்பதால் அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பேச்சு சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மிக அரிதானது. 
-    பத்திரிக்கை செய்தி. 
*    யானைகள் முகாம் நிகழ்ச்சியில் எதார்த்தமாக சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னேன். இந்த பிரச்னையை எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் பெரிது படுத்தியுள்ளனர். நான் இந்த சம்பவத்துக்கு உடனடியாகவே வருத்தம் தெரிவித்தேன், இருந்தாலும் அவர்களை மீண்டும் நேரில் வரவழைத்தும் வருத்தம் தெரிவித்துவிட்டேன். 
-    திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை அமைச்சர்)
*    இளைஞர்களின் திறமையை பயன்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமை. நாட்டிலுள்ள ஐந்து கோடி பழங்குடி மக்களின் சமூகப், பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
-    ஓ.பன்னீர்செல்வம் (தமிழக துணை முதல்வர்)
*    குடியுரிமை திருத்த சட்டத்தை நண்பர் ரஜினிகாந்த் திடீரென ஆதரித்திருப்பதை எதிர்பார்க்கவில்லை. தன் மூலம் அவரது உண்மை உருவம், பார்வை தெரியவந்துள்ளது. இதற்காக ரஜினிக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த முயற்சியில் அவர் தோல்வியை தழுவுவார். மாணவர்கள் பற்றிய கருத்துக்கும் ரஜினி நல்ல பலனை அனுபவிப்பார். 
-    தங்கபாலு( தமிழக காங்கிரஸ் மாஜி தலைவர்)

*    யாராவது வீட்டின் ‘கேட்’டை திறந்து கொண்டு வாசலில் வந்து நின்று பேட்டி கொடுத்தால் அதை பெரிதாக போடுகின்றன பத்திரிக்கைகளும், ஊடகங்களும். பேட்டியை கொடுத்துவிட்டு அவர் ஷூட்டிங்குக்கு போய்விடுகிறார். ஆனால் அதைத்தான் முக்கியமாக எழுதிக் கொண்டும், அலசிக் கொண்டும் இருக்கிறார்கள்.
-    மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)
:    விஷ்ணுப்ரியா