stalin says that he will meet modi for farmers

விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திப்போம் என திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி கூட்டத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு நாடு ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி ஜவஹீருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்க்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

முதல் தீர்மானமாக தற்கொலை செய்து கொண்ட 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையான விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்ற ஆலோசனையின்படி விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்த வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி ஆலோசிப்பதற்காக சட்டசபை சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கேட்டுகொண்டார்.