மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்த முயன்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்திக்க, திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார். இதனால், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி பின்னடைவாக கருதப்படுகிறது.

வழக்கமாக, ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், காங்கிரஸ் – பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவர். அப்போது யாருக்கு பிரதமர் பதவி மீது நாட்டம் உள்ளதோ, அவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவர். ஆனால், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் பிரதமர் பதவியை பதவியை பிடிக்க போட்டிபோட்டு கடைசியில் மூன்றாவது அணி என்பது, தேர்தலுக்கு முன்பாகவே கரைந்துவிடும்.

இந்த முறை, மூன்றாவது அணிக்கான முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் சந்திரபாபு நாயுடு. கடந்தமுறை போல் இம்முறை பாஜக அவ்வளவு எளிதில் வெற்றி பெறாது; காங்கிரஸ் வெற்றியும் பெரும்பான்மையை தொடும் அளவுக்கு இருக்காது என்ற கணிப்புகள், அவரது மனதில் மூன்றாவது அணிக்கான எண்ணத்தை விதைத்தது.

இதற்காகத்தான் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை வந்து சந்தித்தார். அப்போது பட்டும் படாமல் பதில் கூறி அனுப்பிவைத்த ஸ்டாலின், அடுத்த சில வாரங்களிலேயே ராகுல் தான் பிரதமர் என்று அதிர வைத்து, சந்திர பாபு நாயுடுவின் திட்டத்தை தவிடு பொடியாக்கினார்.  

ஆனால், தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருக்கும்; முயன்றால் மூன்றாவது அணி சாத்தியம் என்ற நப்பாசையுடன் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். இதற்காக, தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சூட்டோடு, கர்நாடக முதல்வர் குமாரசாமியுடனும் தொலைபேசியில் பேசினார்.

அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவும் சந்திரசேகர ராவ் திட்டமிட்டார். இதற்காக, மே 13ஆம் தேதி என்று நாளும் குறிக்கப்பட்டது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடக்க இருந்தது. ஆனால், மூன்றாவது அணி தொடர்பாக ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில், ராகுலை பிரதமர் என்று கைகாட்டிய நீங்கள் மூன்றாவது அணிக்காக பேச வருபவரை சந்திக்கலாமா? என ஸ்டாலினிடம் பேசி இருக்கிறார்கள். தேவையில்லாமல் காங்கிரஸின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். தமிழகத்தில் அரசியல் காய்களை நகர்த்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்று ஸ்டாலினுக்கு மூத்த திமுக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, சந்திரசேகர ராவுடனான சந்திப்புக்கு, ஸ்டாலின் தரப்பில் இருந்து கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது அணி என்ற பேச்சுக்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறாரே என்று ராவ் கொஞ்சம் அப்செட் ஆனபோதும் கூட, மம்தா பானர்ஜி, முலாயம் சிங், மாயாவதி, கெஜ்ரிவால் போன்றவர்களின் துணையுடன் மூன்றாவது அணி அமைத்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டு வருகிறார். ஆனால், இவர்கள் அனைவருமே பிரதமர் நாற்காலிக்கு போட்டி போட்டு வருகிறார்கள். இதனால், வழக்கம் போல் மூன்றாவது அணி, தேர்தல் பரபரப்பு அடங்குவதற்குள் காணாமல் போய்விடும் என்பதே உண்மை.