stalin question about saravanan video

சட்டமன்ற விவாதத்தின்போது, எம்எல்ஏ சரவணன் வீடியோ காட்சி குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி பேச சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால், திமுகவினர் கூச்சலிட்டனர். அங்கு அமளி ஏற்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓபிஎஸ் அணி உருவானது. இந்த அணியில், அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் இணைந்தனர். இதனால், சசிகலா தரப்பினர், மற்ற எம்எல்ஏக்கள், அந்த அணியில் இணைய கூடாது என்பதற்காக கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, முதலமைச்சரை தேர்வு செய்ய கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்கியவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறினார். இந்த வீடியோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது, எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

எம்எல்ஏ சரவணனின் வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது. இதற்கு, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், ஏற்கனவே கூவத்தூர் சம்பவம் பற்றி, எதிர்க்கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அதை பற்றி பேச முடியாது. அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என்றார்.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர். இதனால், சட்டமன்றத்தில் கூச்சலும் அமளியும் ஏற்பட்டது.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணனும், சட்டமன்றத்தில் வந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள அவர், 4வது வரிசையில் அமர்ந்து எதுவும் பேசாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.