நீட்தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 27ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் திமுக பொது செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், மாவட்டசெயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், பி.கே.சேகர்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக அடுத்தடுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,கையெழுத்து இயக்கம் நடத்தி, மத்திய அரசுக்கு தெரிவிப்பது.

ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதிகளில் முரசொலி நாளிதழின் பவள விழாவை விமர்சையாக கொண்டாடவேண்டும். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை அழைக்க வேண்டும்.

வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி, மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.