தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த சமயம் அது. அந்த தேர்தலில் காங்கிரஸ், பாமக என பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டும் திமுகாவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத சூழல். ஆனால் பெரிய அளவில் கூட்டணி இல்லாமலேயே 60 இடங்களுக்கு மேல் அதிமுக வென்று இருந்தது. அப்போதைய திமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்று இருந்தனர்.

திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட சென்னையில் முக்கிய தொகுதிகளை திமுக இழந்திருந்தது. மேலும் மிக பிரமாண்ட கூட்டணி அமைத்தும் கூட்டணி பலமில்லாத அதிமுகவை திமுகவால் பெரிய அளவில் வீழ்த்த முடியாத சூழல். 2006ம் ஆண்டு திமுக கூட்டணியும் பலவீனமாக இருந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆட்சிக்கு வந்த உடன் நடைபெறும் தேர்தல் என்பதால் வெற்றி மிக முக்கியம். ஆனால் மக்கள் மனநிலை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை திமுக உணர்ந்திருந்தது.

இதனால் தான் அப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தலை அறிவித்தது தமிழக அரசு. உள்ளாசித் துறைக்கு அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் சட்டப்பேரவையில் இந்த தகவலை வெளியிட்டார். மேலும் மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் நிலையில் வார்டு கவுனர்சிலர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்கின்றனர்.

இதனால் விழுப்புரம், விருதாச்சலம் நகராட்சிகளில் நகர்மன்ற தலைவர்கள் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மை கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளனர். இதனால் மக்கள் பணிகளை ஆற்ற முடியாத சூழல் உள்ளது என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். மேலும் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தலை அறிவித்து, அப்படியே நடந்து முடிந்தது. அதாவது பெரும்பாலான நகர்மன்றங்களில் சுயேட்சைகள் அதிக இடங்களில் வென்று இருந்தனர். அவர்களை வளைத்துப் போட்டு நகர்மன்ற தலைவர்களை திமுக தனதாக்கிக் கொண்டது.

சென்னையில் மா சுப்ரமணியம் மேயர் ஆனது கூட மறைமுக தேர்தலால் தான். நேரடி தேர்தல்என்றால் நிச்சயமாக அப்போது சென்னை மேயர் பதவி திமுகவிற்கு சென்று இருக்காது என்று பேச்சு இருந்தது. இப்படி மக்கள் என்ன செய்வார்களோ என்கிற அச்சம் தான் திமுக அப்போது தேர்தலை நேரடியாக நடத்தாதற்கு காரணம். இதே போல விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் ரிஸ்க் வேண்டாம் என்று கருதியே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மறைமுகமாக நடத்த அதிமுகவும் முடிவெடுத்துள்ளதாம்.