தம்மா துண்டு விதைக்குள்தான் அம்மாம் பெரிய ஆலமரம் ஒளிந்திருக்கிறது! அதேபோலத்தான்  அதிகார மையங்கள் நடத்தும் சிறிய நிர்வாக மூவ்களின் பின்னணியில் பேய்த்தனமான அரசியல் புயல்கள் புதைந்திருக்கும். தற்போது லாட்டரி மாட்டினின் பிராப்பர்ட்டிகளில் நடக்கும் ரெய்டைப் பற்றி இப்படித்தான் விளக்குகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
 
என்ன விவகாரம்? விரிவாய் பார்ப்போம்....

சாண்டியாகோ மார்ட்டின்! இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத காஸ்ட்லி கறுப்பு புள்ளி இவர். காரணம் இவரிடமிருக்கும் பிளாக் மணிதான் பல அரசியல் கட்சிகள் வெள்ளையும் சொள்ளையுமாய் ஆட்சி நடத்த உதவிக் கொண்டிருக்கிறது. லாட்டரி பிஸ்னஸின் மூலம் தாறுமாறாக சம்பாதித்துக் குவித்த இந்த மனிதருக்கு நெம்பர் 1 மட்டுமல்லாமல் 2, 3 என பல ரேஞ்சுகளில் பிஸ்னஸ் இருக்கிறது.
 
தமிழகத்தின் சேனல் உலகில் செம்ம ஸ்டைலியாகவும், செக்ஸியாகவும் புரட்சியை உருவாக்கிய ‘SS musc’சேனலை நினைவிருக்கிறதா? அதன் நிறுவனர் இவர்தான். இது மட்டுமில்லாமல் சுண்டக்காய் சைஸிலிருந்து சுரங்கம் அளவுக்கு பலவிதமான பிஸ்னஸ்களில் மில்லியன் கணக்கில் கொட்டுகிறது பணம். கிட்டத்தட்ட எல்லா மாநில முதல்வர்களும் அண்ணனின் பாக்கெட்டில் இருக்கிறார்கள். 

தமிழகத்தில் லாட்டர் பிஸ்னஸுக்கு தடை இருந்தாலும் கூட ஒரு நம்பர் லாட்டரியும், கேரள லாட்டரி கள்ளத்தனமாக ஊடுருவவும் இவரின் கைங்கர்யங்களே காரணம். ஒரு காலத்தில் அ.தி.மு.க.வின் செல்லப்பிள்ளையாய் இருந்த மார்ட்டின், பின் தி.மு.க.வின் நல்ல பிள்ளையானார். தேசமெங்கும் எக்கச்சக்கமான கிரிமினல் வழக்குகளையும், மோசடி புகார்களையும் தன் பயோடேட்டாவில் பளபளவென வெச்சிருந்த இவரை, சர்வதேச புகழ்பெற்ற ‘செம்மொழி மாநாடு’ நிகழ்வின் முக்கிய குழுவில் போட்டு, அரசு சார்பிலேயே ஆடம்பர பத்திரிக்கையை அடித்து வழங்கியபோது, கருணாநிதியை கன்னாபின்னாவென திட்டினார்கள் பொதுநல விரும்பிகள். ஆனாலும் கண்டுகொள்ளவில்லை முத்தமிழ் அறிஞர். 

அவருக்குப் பிறகு இதோ இப்போது ஸ்டாலினும் மார்ட்டினோடு ஆரோக்கியமான நட்பில்தான் இருக்கிறார். மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், பாரிவேந்தரின் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலிருப்பது அடிக்கோடிடப்பட வேண்டிய விஷயம். 

இந்த மார்ட்டின் இப்போது கொல்கத்தாவில் ‘பெங்கால் லாட்டரி’ எனும் பெயரில் செம்ம ஹாட்டாக பிஸ்னஸ் செய்து கொண்டிருக்கிறார். மம்தாவின் பூரண ஆசி இவருக்கு இருக்கிறது. பி.ஜே.பி.க்கு எதிரான கூட்டணியில் ஸ்டாலினும், மம்தாவும் ஒரே அலைவரிசையில் வரும் வகையில் இவர்களின் நட்பு பாலத்துக்கு சரியான இரும்புத் தூணாக நிற்கிறார் மார்ட்டின். 

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தேசம் முழுக்கவே தமிழகம், கேரளம், கொல்கத்தா என பல இடங்களில் மார்ட்டினின் சொத்துக்களில் வருமானவரித்துறை தெறிக்கத் தெறிக்க ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. கோவையில், மார்ட்டினின் அலுவலக முக்கிய பணியாளர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வருமான வரித்துறையின் பிடி பட்டாக்கத்தியாய் பளபளக்கிறது! என்கிறார்கள்.
 
இந்நிலையில், மார்ட்டின் சொத்துக்கள் மீது திடீரென இப்போது வருமான வரித்துறை பாய்வது ஏன்? என்று கேட்டால், ‘தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காகத்தான்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


 
புரியலையே! என்றதும், அதை விரிவாக விளக்கியவர்கள்....”தேர்தலை செம்ம தெனாவெட்டாகத்தான் எதிர்கொண்டது பி.ஜே.பி. எப்படியும் அதிரிபுதிரியாக வென்றுவிடுவோம்! என்று நினைத்தது. அதிலும் தமிழகத்தில், ஆளும் தரப்போடு கூட்டணியில் இருப்பதால் கவலையில்லை என்று நினைத்தது. 

ஆனால் எக்ஸிட் போல் விஷயங்களோ வேறு மாதிரியான கணக்கை தருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு முப்பதுக்கு மேலான இடங்கள் கிடைக்கும்! என்று தகவல் தடதடக்கின்றது. அதேபோல் மேற்குவங்கத்திலும் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸுக்கு அருமையான அறுவடை இருக்குமென தகவல் வருகிறது. 

இந்நிலையில், கடந்த முறை போல் ஏகபோக பெரும்பான்மையுடன் அரசமைக்க வாய்ப்பில்லை என்பதை மோடி, அமித்ஷா இருவரும் கணித்துவிட்டனர். எனவே, தேர்தலில் தங்களின் எதிரியாக நின்று ஜெயித்தவர்களை, ஆட்சியமைப்பதில் நண்பனாக்கி கொள்ள முடிவெடுத்துள்ளனர். அந்த வகையில்தான் தி.மு.க. மற்றும் திரிணமுல் இரு கட்சிகளையும் வளைக்க நினைக்கிறார்கள். 

அதற்கான மிரட்டல் துருப்புச் சீட்டாகத்தான் மார்ட்டினை பயன்படுத்துகின்றனர். அதாவது, தி.மு.க. மற்றும் திரிணமுல் என இரண்டு கட்சிகளின் செலவுகளுக்கும் மார்ட்டின் மிக மிக கணிசமான தொகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறாராம். இதை ஆதாரங்களோடு ஆவணப்படுத்திவிட்டதாம் மத்திய உளவுத்துறை. இவற்றின் அடிப்படையில்தான் ரெய்டே ஏவப்பட்டுள்ளதாம். இனி அந்த  ஆதாரங்களைவைத்து தி.மு.க. மற்றும் திரிணமுல் கட்சிகளின் தலைமையிடம் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளனராம். 

‘ஆசியாவே அறிந்த ஒரு பிளாக் மார்க் தொழிலதிபர் மார்ட்டின். அவர் மேலேயும், அவரது பிஸ்னஸ் மேலேயும் இவ்வளவு வழக்குகள் இருக்குது. இப்படிப்பட்ட மனுஷனோடு அண்டர்கிரவுண்ட்ல நீங்க தொடர்பில் இருக்கீங்க. இதை நாங்க ஆதாரத்தோடு பிடிச்சிருப்போம். இதை எக்ஸ்போஸ் பண்ணினால் உங்க பெயரும் டேமேஜ் ஆகும், மேலும் மார்ட்டினை முடக்குறது மூலமா உங்கள் கட்சிகளுக்கான வருவாய் ஆதாரமும் பாதிக்கப்படும். அதனால நாம எல்லாருமே நட்பா போயிடலாம். தேர்தலுக்கு பிறகு நாங்க ஆட்சியமைக்க தோள் கொடுங்க, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை வெற்றிகரமா அமைப்போம். உங்கள் கட்சிக்கு என்னென்ன முக்கிய இலாகா வேணுமோ அதை பேசி முடிவெத்து நிச்சயம் தர்றோம். 

முடியாதுன்னு நீங்க இப்பவும் மறுத்தால் மார்ட்டினை முடக்குறது மூலமாக என்ன நடக்குமோ அது நடக்கும்.” அப்படின்னு சாந்தமாக அதே வேளையில் அழுத்தமாக சொல்லிட்டு இருக்கிறாங்களாம். 

இரண்டு கட்சிகளுமே ஒரு சமயம் இது பற்றி யோசிக்கவும், மறு சமயம் ‘ஆனது ஆகட்டும் போங்கடா. உங்களை திட்டித்தான் மக்களின் ஆதரவை பெற்றோம். இப்போ ஜெயிச்சுட்டு, உங்களோடு கூட்டணி போட்டால் அது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். நாங்க அதுக்கு தயார் இல்லை.’ என்று சொல்லிடவும் நினைக்கிறார்களாம். அதேவேளையில், இந்த வாய்ப்பை விட்டால் இன்னும் ஐந்து வருடத்திக்கு அதிகாரமில்லாமல் கிடக்கணும்! பி.ஜே.பி.யின் கூட்டணியை ஏற்றுக் கொண்டால் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியையும் தூக்கி எறிந்து, நாம முதல்வராகலாம்! என்கிற கணக்கும் ஸ்டாலினின் மூளையில் வந்து போகிறதாம். இன்னும் ஒரு முடிவுக்கு தளபதியும், தீதியும் வரவில்லை என்பதே உண்மை. 

இந்நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது என்பதை நினைத்து வயிறு கலங்கியிருந்த எடப்பாடியார் டீமுக்கு, ஸ்டாலினை ஆட்சிக் கூட்டணிக்குள் இழுக்கும் மோடியின் முரட்டு முயற்சியானது கண்ணையே கலங்க வைத்துவிட்டது.