டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக டி.டி.வி தினகரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக டி.டி.வி தினகரன்
பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாக கூறியிருந்தார். மேலும் மாநில உரிமைகளை மத்திய பா.ஜ.க அரசு பறிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன் இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட தி.மு.க
தொண்டர்கள் தன்னுடன் வர வேண்டும் என்றும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

பொதுக்குழு கூடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று வாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதே போன்று சென்னைக்கு வாஜ்பாய் அஸ்திவந்த போதும் பா.ஜ.க அலுவலகத்திற்கே நேரில் சென்றார் ஸ்டாலின். தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சவுந்திரராஜன் விரைவில் பாரதத்தின் ரத்தினமாக கலைஞர் ஜொலிக்கப்போவதாக கூறினார்.
இதனிடையே சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் தி.மு.க – பா.ஜ.க இடையே முன் எப்போதும் இல்லாத நெருக்கம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் பொதுக்குழுவில் வைத்து பேசிய மு.க.ஸ்டாலின், பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் பல காரணங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் டி.டி.வி தினகரனும் ஸ்டாலின் பா.ஜ.கவை விமர்சிப்பதற்கான காரணம் என்று கூறி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த தகவல்கள் பகீர் ரகமாகஉள்ளது. அதாவது வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற ஸ்டாலின், அங்கு நீண்ட நேரம் காத்திருந்து ரகசியமாக அமித் ஷாவை சந்தித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.

அப்போது கலைஞர் நினைவேந்தலுக்கு வருமாறு ஸ்டாலின் விடுத்த அழைப்பை அமித் ஷா ஏற்றுக் கொண்டதாகவும் தினகரன்
கூறியுள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி அமித் ஷா சென்னைக்கு வரமாட்டார் என்கிற தகவல் அறிந்தே ஸ்டாலின் மோடி அரசை விமர்சிப்பதாகவும் இதற்கு காரணம் விரக்தியும், கோபமும் தான் என்றும் தினகரன் கூறியுள்ளார். பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து வரும் ஸ்டாலின் தினகரன் கூறியது போல் உண்மையில் அமித் ஷாவை சந்தித்தாரா? இல்லையா? என்பதை தி.மு.க தான் விளக்க வேண்டும்.
