நமது ஏஸியாநெட் இணையதளம் கடந்த வியாழக்கிழமையன்று திராவிட கழக தலைவர் வீரமணியை பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ’தி.மு.க.வின் கிளைக்கழகம்தான் திராவிட கழகம்’ என பா.ஜ.கட்சி விமர்சிப்பதாக குறிப்பிட்டிருந்தோம். இதற்காக திராவிட கழகத்தினர் சிலர் நமக்கு போன் பண்ணி பாய்ந்துவிட்டனர். ’நாங்கள் தி.மு.க.வின் தோழமையான இயக்கம், அவ்வளவே. என்றுமே தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததில்லை! அதேபோல் திராவிட சித்தாந்தங்களையும் விட்டுக் கொடுத்ததில்லை.’ என்று விளக்கமும் கொடுத்தனர். 

இந்நிலையில் வீரமணி தன் பேட்டியில் குறிப்பிட்ட ஒரு விஷயமானது ஸ்டாலினை மிகவும் கடுப்பாகிவிட்டதாக ஒரு புது பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. அதாவது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இது பற்றி பேசியிருக்கும் வீரமணி “அருந்ததிய மக்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்கியவர் கலைஞர். அந்த வகையில் அவர்கள் எப்போதும் அவர் மீது அன்பாகவும், நன்றியுடனும் இருக்கின்றனர். அந்த நன்றியை வெளிப்படையாக மெய்ப்பிக்கும் விதமாக கோயில் கட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பூமி பூஜை போட்டதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்கள் அளவுக்கு மற்றவர்களிடம் பெரியார் சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. அரசியல் கட்சிகள் எதுவும் திராவிடர் கழகம் போல் செயல்படவும் முடியாது.” என்று விளாசிவிட்டார். 

இதைப் பார்த்து தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் டென்ஷனாகிவிட்டனர். ‘வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தல் அரசியலுக்கு வருவதில்லைதான். ஆனால் எங்களுடன் தோழமையாக இருந்து கொண்டும், தேர்தல் வேளைகளில் எங்களுக்கான பிரசாரங்களை ஒரு டைப்பாக செய்தும் எங்கள் தலைமையை கூல் செய்கின்றனர். பின் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களுக்கான பல அனுமதிகள், சலுகைகள், சேவைகளுக்கான வழி வாய்க்கால்கள் ஆகியவற்றை எளிதாக உருவாக்கிக் கொள்கிறார்கள். 
ஒரு அரசியல் கட்சியின் தோழனாக இருந்து இவ்வளவையும் பெறுவதும் ஒரு வித அரசியல்தான். ஆனால் வெளியிலோ ‘எங்களைப் போல் யாரும் பெரியார் கொள்கையை கொண்டாட முடியாது. எங்கள் போல் யாராலும் செயல்பட முடியாது.’ என்று எல்லா கட்சிகளோடு எங்களையும் ஒரே தளத்தில் நிறுத்தி, இடித்துப் பேசுவது அவலமான செயல். திராவிடர் கழகம் போல் தி.மு.க. இயங்கவில்லை என்றால் ஏன் எங்களோடு தோழமை பாராட்ட வேண்டும்?” என்று பொங்கியிருக்கிறார்கள். 

வீரமணி பேசிய விவகாரம் பற்றி ஸ்டாலினிடம் ஓதிய தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் “நம் தலைவர் திராவிடர் கழகத்துக்கும், வீரமணிக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளார். ஆனால் அவருக்கு அருந்ததியர் மக்கள் கோயில் கட்டும் விஷயத்தில் ‘பூமி பூஜை போட்டதில் உடன்பாடில்லை’ என்று ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது போலவும், நாமும் பா.ஜ.போல் பூஜை, பரிகாரம், மூட நம்பிக்கைகள் என்று போவது போலவும் பேசியிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம்? இந்த திராவிடர் கழகம் நம்மோடு இனி வேண்டுமா? நம் மேடைகளில் இவர்களை நிறுத்துவதால் இந்துக்களின் ஓட்டுவங்கி நம்மை வெறுக்கிறது. யோசியுங்கள் தலைவரே.” என்று உசுப்பியுள்ளனர். 

இதன் மூலம் கி.வி. மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம் தி.மு.க. தலைவர்.