கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் டிரெண்டிங்கில் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் விஷயம்...

“சூடு, சொரண்டை இருந்திருந்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்குமா பா.ம.க.?” என்று ஸ்டாலின் கேட்ட ஹைவோல்டேஜ் கேள்விதான். இந்த மின்சாரம் இப்போது வரை அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளையும், அதிர்ச்சிகளையும் கிளப்பிக் கொண்டே இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில், ஏன் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார் ராமதாஸ்? என்று விளக்கம் கொடுத்திருக்கும் பா.ம.க.வின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கே.பாலு... 

“சமீபத்தில் நடைபெற்ற எங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் கூட்டணியாய் தேர்தலை அணுக முடிவு செய்தோம். கூட்டணி அமைத்துதான் போட்டி! என்று முடிவு செய்ததும் எல்லா கட்சிகளுடனும் இயல்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் தி.மு.க.வும் அடக்கம். 

ஆனால் பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில் ‘தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தமிழகத்திற்கு நன்மை பயக்காது!’ என்று டாக்டர் அய்யா கண்டறிந்தார். மேலும், ஸ்டாலினின் குணமும் இப்படியொரு முடிவை எடுக்க எங்களை உந்திவிட்டது என்று சொல்ல வேண்டும். 

கூட்டணிக்கு வரும் பிற கட்சியினரை அணுசரித்துப் போகிற குணமே ஸ்டாலினிடம் இல்லை. மூத்த அரசியல் தலைவரான ராமதாஸை உரிய முக்கியத்துவத்தோடு ஸ்டாலின் அணுகவில்லை. இந்த நேரத்தில் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் கூட்டணி விவகாரத்தை மிக லாவகமாக கையாண்டிருப்பார்.” என்று எடப்பாடியாருடன் தங்களுக்கான கூட்டணிக்கு முக்கிய காரணமே ஸ்டாலின் தான் என்று தெறிக்கவிட்ட பாலு தொடர்ந்து...

“துட்டுக்காகத்தான் அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளதாக ஸ்டாலின் சாடுகிறார். சரி, தி.மு.க.வோடு நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது எந்தப் பெட்டி தருவதாக பேரம் பேசினார்? ஸ்டாலின் சமீபத்திய விஷயமொன்றை யோசித்துப் பார்க்கவேண்டும். 

அவருடைய அப்பாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும் பிரச்னையின் போது, டாக்டர் அய்யா சொன்னதன் பேரில் பா.ம.க. தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற்றோம். அந்த சென்சிடீவான சமயத்தில் பா.ம.க. எப்படி நடந்து கொண்டது என்பதையெல்லாம் ஸ்டாலின் நினைத்துப் பார்த்தால் இப்படியான அவதூறுகளை எங்களை நோக்கிப் பேசமாட்டார் அவர்.” என்றிருக்கிறார். 

இந்நிலையில், பா.ம.க.வினால் எந்த பயனுமில்லை என்பதாலேயே ஸ்டாலின் ராமதாஸிடம் இணக்கமாக  கூட்டணி பேசாமல் அலட்சியம் செய்தார், இங்கே கைவிரித்தால் அ.தி.மு.க.விடம்தான் ராமாதாஸ் போவார், அப்படி அங்கே கூட்டணி ஏற்பட்டால் அது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்! என்று தெரிந்தேதான் ஸ்டாலின் இப்படியொரு அரசியல் ராஜதந்திரத்தை செய்தார்! என்று தி.மு.க. விளக்கம் கொடுக்கிறது. 

டாக்டரை அ.தி.மு.க. கூட்டணிக்குள் இழுத்துவிட்டதன் மூலம், 21 தொகுதி இடைத்தேர்தல்களில் பா.ம.க.வின் பூரண ஆதரவை பெற்றிருக்கிறது ஆளுங்கட்சி. இது ஸ்டாலின் எதிர்பாராத மூவ்! என்கிறார்கள். 

தேர்தல் முடிவில் தெரியும்...ஸ்டாலினின் ராஜதந்திரம் எப்படி ஒர்க் - அவுட் ஆகியிருக்கிறது என்று!