* அ.தி.மு.க. சார்பில் மூன்று ராஜ்யசபா எம்.பி.க்கள் அடுத்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் ஒன்றை தே.மு.தி.க. எதிர்பார்க்கிறது. ‘கூட்டணி தர்மத்தை மதித்து முதல்வர் இ.பி.எஸ். நிச்சயம் நம் கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி வழங்குவார்!’ என்று விஜயகாந்த் தரப்பு தன் தொண்டர்களிடம் சொல்லி வருகிறது. ஆனால், அமைச்சர் ஜெயக்குமாரோ ‘தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தருவதாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.’ என்று கூறியிருக்கிறார். -பத்திரிக்கை செய்தி.

* நடிகர் விஜய்யை பயன்படுத்திட தி.மு.க. துடிக்கிறது. ஆனால், எந்த கட்சியையும் கைப்பற்றும் அவசியம் ரஜினிக்கு இல்லை. மக்களின் இதயங்களை வென்றவர் ரஜினி. அவர் வந்தால், தமிழ்நாட்டில் அத்தனை கட்சிகளின் கூடாரங்களும் காலியாகிவிடும். 2021ல் அவர்தான் முதல்வர் -அர்ஜூன் சம்பத் (இந்துமக்கள் கட்சி தலைவர்)

* முந்தையை தி.மு.க. ஆட்சியின் போது மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த ஒன்பது ஆண்டுகளில் எங்கள் அரசு ஏகப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனால் அரசுக்கு நிறையவே நிதிச்சுமை. -கடம்பூர் ராஜூ (தமிழக செய்தித்துறை அமைச்சர்)

* குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மதம் மற்றும் மொழி வாயிலாக மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன. இதனால் மக்களிடம் இருக்கும் ஒற்றுமையை குலைத்து, வேறு திசைக்குத் திருப்பி விடுகின்றனர். உண்மையிலேயே சிஏஏ வானது நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட  நல்ல முடிவு. -பிரேமலதா (தே.மு.தி.க. பொருளாளர்)

* டெல்லி கலவரத்தை நடத்தியது பா.ஜ.க. என்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், டில்லியில் இருக்கும்போது, பா.ஜ.க.வினர் கலவரம் செய்வார்களா? எங்கு கலவரம் நடந்தாலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.தான் காரணம் என்கிறார்கள். இது தவறு. - ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்)

* குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், போராடுவதில் எந்த பயனும் இல்லை! என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் போராடாமல் எதுவும் நடக்காது. சட்டத்தை மாற்ற வேண்டுமானால் போராட்டம் நடத்தித்தான் ஆக வேண்டும். அரசியலால் கமல், ரஜினி படும் கஷ்டத்தைப் பார்க்கிறேன். சினிமாவில் சாதித்த பின் நானும் அரசியலுக்கு வருவேன். -பார்த்திபன் (நடிகர்)

* திரவுபதி படம் பற்றி வந்த புகார்கள், எழுதப்பட்ட கருத்துக்கள் எதுவுமே அடிப்படையில்லாதவை! என்பது அப்படத்தைப் பார்க்கும்போது புரிகிறது. ஒவ்வொரு பெண் குழந்தையும் திரவுபதியாக வாழ வேண்டும். சிலருக்கு திரவுபதி எனும் பெயரைக் கேட்டாலே பலம் வரலாம்! -ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலாளர்)

* தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் மருமகள் டாக்டர் திவ்யாவின் சகோதரர் சண்முகநாதன். இளைஞரான இவர், தனது அப்பா -அம்மா தனக்கு கார் வாங்கித் தர தாமதம் செய்ததால் மனமுடைந்து, வீட்டு சீலிங் ஃபேனின் கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ’கார் வாங்கிக் கொடுக்க லேட்டாகுன்னு சொல்லியெல்லாமா தற்கொலை பண்ணிப்பாங்க? ச்சே என்ன பையன் இவரு. அழகான இளைஞன், இப்படி வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரே!’ என்று அதிருதாம் கோயமுத்தூர் பா.ஜ.க. - பத்திரிக்கை செய்தி. 

* டில்லியில் நடந்த கலவரத்துக்கு காரணம் உணவுத்துறையின் அலட்சியப்போக்குதான்! என நடிகர் ரஜினிகாந்த் சொன்னதை வரவேற்கிறேன். கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும். - திருமாவளவன் (லோக்சபா எம்.பி.)

* தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் நூறு  யூனிட் மின்சாரம் இலவசமா வழங்கப்படுகிறது. எங்கள் அரசை பொழுது விடிஞ்சா, அடைஞ்சால் குறைகூறும் ஸ்டாலின் வீட்டுக்கும் இதே நூறு யூனிட் இலவசமாக வழங்கப்படுது. அதை வாங்கிக்கிட்டும், அவர் எங்களை குறை கூறுகிறார். -செல்லூர் ராஜூ (கூட்டுறவுத்துறை அமைச்சர்)