அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா வைரஸ்  பரவலுக்கு பலர் மீதும் பழிபோட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார். கொரோனா மறைவதுதான் நற்பெயர் தருமே தவிர அதனை மறைப்பதல்ல. இனியாவது மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு  கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும். அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால், தமிழகத்தில் கொரோனா பரவியது என்றார். 

மேலும், பேசிய அவர் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல் ஸ்டாலினின் அறிக்கை உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.  இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதல்வர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. முதல்வருக்கு தெய்வ பக்தி உள்ளவர், ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.