ஜெயலலிதாவின் சிலை மாதிரி ஆயிடக்கூடாது... கருணாநிதி சிலையை இன்ச் பை இன்ச் நோட்டமிடும் ஸ்டாலின்!
அ.தி.மு.க. எனும் பேரியக்கம் தன் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய அவமானமான நாள் அது. மறைந்த ஜெயலலிதாவின் சிலையை கட்சியின் தலைமை கழகத்தின் முன்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் இன்னிசை முழங்க திறந்து வைத்தனர்.
அ.தி.மு.க. எனும் பேரியக்கம் தன் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய அவமானமான நாள் அது. மறைந்த ஜெயலலிதாவின் சிலையை கட்சியின் தலைமை கழகத்தின் முன்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் இன்னிசை முழங்க திறந்து வைத்தனர். சிலையின் முகத்தைப் பார்த்த தொண்டர்களும், இன்ன பிற நிர்வாகிகளும் கதிகலங்கிப் போயினர். காரணம் ஜெயலலிதாவின் சிலை என்று சொல்லப்பட்ட சிலையின் முகமோ வேறு யாரோ ஒரு பெண்மணி போலிருந்ததுதான்.
‘இந்த பதவியும், பகட்டும் அம்மா எங்களுக்கு போட்ட பிச்சை! என்று மேடைக்கு மேடை முழங்கும் அமைச்சர்களால் அவருக்கு ஒரு உருப்படியான சிலையை கூட உருவாக்கிட முடியாதா? ஆர்டர் கொடுத்துவிட்டு அப்படியே இருந்துவிடலாமா, சிலை உருவாவதை தங்களின் அல்லக்கை ஒருவரை விட்டாவது கவனித்திருக்கலாமே! அட அது கூட வேண்டாம், ஏதோ ஒரு தொண்டனை பணித்திருந்தாலும் கூட, அவன் சோறு தண்ணி மறந்து நாய் போல் அந்த சிலையில் காலடியில் கிடந்து அதன் முகத்தில் திருத்தங்கள் சொல்லி, மறைந்த அம்மாவை அப்படியே சிலையில் வார்த்துக் கொண்டு வந்திருப்பானே! ஆனால் இந்த மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் ஒரு சிலையை கூட உருப்படியாக வடிக்க வைக்க முடியாமல் அம்மாவின் தெய்வீக முகத்தை அசிங்கப்படுத்திவிட்டார்களே?’ என்று அழுது தீர்த்தது அக்கழகம்.
இணையத்திலோ இந்த விவகாரத்தை ஒரு வாரத்துக்கு வெச்சு செய்தனர். அதிலும் அ.தி.மு.க.வின் அதிகார மையம் ஒருவரின் மனைவியின் படத்தைப் போட்டு ‘இவருக்குதான் சிலை வைத்துள்ளார்கள். அது ஜெயலலிதாவின் சிலையே அல்ல’ என்று பரவிய மீம்ஸை பார்த்து சிரிப்பு வரவில்லை, உண்மைதானோ? என்று சிறு நம்பிக்கையே வந்தது. காரணம் சிலையின் முகமும், அந்த பெண்மணியின் முகமும் ஒன்றே. ஆக இந்த நாள்தான் அ.தி.மு.க. தன் வாழ்நாளில் சந்தித்ததிலேயே மிக மோசமான நாள்.
இந்த சிலை கூத்துக்கு மற்ற அமைச்சர் கனவான்கள் வாய் திறக்காமலிருக்க, வழக்கம்போல் முட்டுக்கட்டை கொடுக்க வந்த அமைச்சர் ஜெயக்குமார் ‘விரைவில் அந்த சிலையானது சீர்செய்யப்பட்டு தலைமை கழகத்தில் வைக்கப்படும்.’ என்று சொன்னார். அவர் சொல்லி மாதங்கள் ஓடிவிட்டன, ஆனால் ஒன்றும் நிகழவில்லை.
ஆனால் தி.மு.க. முகாமிலோ நெகிழ்வான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அது என்ன தெரியுமா?....
தி.மு.க.வின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் என்பவர் கருணாநிதியின் முழு உருவ சிலையை வடித்து வருகிறார். இதை இன்று ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ‘அப்படியே அப்பா நேர்ல நின்ன மாதிரியே இருக்குது!’ என்று நெகிழ்வாய் பிரமித்திருக்கிறார்.
காரணம், அந்தளவுக்கு அந்த சிலையின் துல்லியம் இருக்கிறது. கருணாநிதியை அவ்வளவு அழகாக வெண்கலத்தில் வடித்தெடுத்து வருகிறார் அந்த சிற்பி. நெகிழ்ந்த ஸ்டாலின் சின்னச்சின்ன திருத்தங்களையும் சொல்லியிருக்கிறார். கூடிய விரைவில் இந்த சிலை கோலாகலமாக அறிவாலயத்தில் வந்து நிலைகொள்ள இருக்கிறது.
கருணாநிதிக்கு நேர்த்தியாக உருவாகும் சிலை போட்டோவை வாட்ஸப்பில் பார்த்து, புருவம் உயர்த்தியுள்ளனராம் அ.தி.மு.க. அமைச்சர்கள். தாங்களும் தங்கள் தலைவிக்கு சிலை வடிக்கிறோம்! என்று சொல்லி நடத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சில நொடிகள் நினைத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை குத்திக் காட்டிப் பேசும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளும், மாஜி நிர்வாகிகளுமான சிலர் ”அம்மா இறந்து எத்தனை மாசங்கள் கழித்து சிலையை எங்காளுங்க வெச்சாங்க, ஆனா கருணாநிதி இறந்து நாற்பது நாட்களுக்குள் அவங்க சிலை வைக்கிறாங்க. இதுதானுங்க உண்மையான பாசம், விசுவாசம், நன்றிக்கடன் எல்லாமே!
ஆற அமர பல மாசங்கள் எடுத்துக்கிட்டும் கூட வைக்கப்பட்ட சிலையின் முகம் எங்க தலைவியின் சாயலில் இல்லை. ஆனால் அவசர அவசரமாய் செய்யப்பட்டும் கூட சிலையில் கருணாநிதியின் முகம் அச்சு அசலாய் இருக்குது. ஒப்புக்கு ஒரு காரியம் பண்றதுக்கும், உளப்பூர்வமாய் ஒரு காரியம் பண்றதுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டிக் கொடுத்துடுச்சே இந்த இரண்டு சிலைகளும்.
கருணாநிதி இறந்த பிறகு தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பெரிய ஆளுமைகளை கொண்டு ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்!’ன்னு நிகழ்ச்சிகள் நடத்துனாங்க. சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு அமித்ஷாவையே அழைச்சு, கடையில் கட்கரியை உட்கார வெச்சாங்க. இறந்த தங்கள் தலைவரின் பெருமையை உலகமறிய செஞ்சாங்க. இத்தனைக்கும் அவங்க எதிர்கட்சிதான்.
ஆனால் ஆளுங்கட்சியில் இருந்துகிட்டு, அதுவும் மத்திய அரசின் முழு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வெச்சுக்கிட்டு எங்க ஆளுங்க இப்படியொரு விழாவை அம்மாவின் புகழுக்கு வணக்கம் சொல்லி நடத்தினாங்களா? இல்லையே!
அம்மாவால் கிடைத்த ஆட்சி வேணும், அம்மா கொடுத்த பதவி வேணும், அம்மா கொடுத்த அதிகாரம் வேண்டும், அம்மா கொடுத்த அதிகாரத்தால் வந்து குவியும் பலன்கள் வேணும், ஆனா அம்மாவுக்காக ஒரு துரும்பை கிள்ளிப்போட மாட்டோம்...அதானே இவங்க இலக்கு.
அம்மா இறந்து சில மாதங்கள் கழிச்சு மாநிலம் முழுவதும் தலைவரோட நூற்றாண்டு விழாவை அரசு செலவில் கொண்டாடி, அந்த மேடையை சசியையும் தினகரனையும் கரிச்சுக் கொட்ட பயன்படுத்தினாங்க. அட அந்த கூத்துக்கள் முடிஞ்ச பிறகாவது அம்மாவுக்கு நினைவஞ்சலி கூட்டங்களை நடத்த யோசிச்சாங்களா? இல்லையே.
செய்ய மாட்டாங்க, அவங்க செய்யவே மாட்டாங்க. ஏன்னா உண்மையான விசுவாசம் இருக்குற மனசுதான் இப்படி அஞ்சலி செலுத்தவும், கண்ணீர் சிந்தவும் யோசிக்கும்.” என்று வேதனையில் போட்டுப் பொளக்கிறார்கள்.
யதார்த்தம் சுடத்தான் செய்யும்!