களத்தூர் கண்ணம்மாவில் டிரவுசர் பையனாக ‘அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!’ என்று நடிப்பு வாழ்க்கையை துவக்கிய கமல் இதோ இந்தியன் - 2வில் அட்ராசிட்டி மேக் -அப் உடன் அதகளம் செய்து கொண்டிருக்கிறார். அறுபது வருடங்களை சினிமாவில் கழித்திருக்கும் மிகப்பெரிய ஜாம்பவானாக கலையுலக ஆளுமைகளால் மதிக்கப்படுகிறார். சினிமா உலகில் ‘கமல் - 60’ என்பது மிகப்பெரிய அளவில் கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சினிமா தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் கமல்ஹாசனுக்காக சென்னையில் பெரும் விழா எடுக்கிறாராம். இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும் திரை ஆளுமைகள் பங்கேற்கிறார்கள். கமல் இப்போது நடிகர் மட்டுமில்லை, அரசியல் தலைவரும் கூட. எனவே அரசியல் ஆளுமைகளையும் இந்த மேடையில் அமர்த்த முயற்சி நடந்து வருகிறதாம். அந்த வகையில் ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை இதற்காக அழைக்கிறார்களாம். இந்த விழாவில்  கலந்து கொண்டு, கமலுக்கு வாழ்த்துரை தர ஸ்டாலின் ஒப்புக் கொண்டுவிட்டாராம். இதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. 


கட்சி துவங்கிய கமல்ஹாசனை ‘காகித பூக்கள் மணக்காது’ என்று ஸ்டாலின் கொட்டினார், அதற்கு பதிலாக ‘ஊழல் பொதி’ என்று கமலும் திருப்பி தாக்கினார் தி.மு.க.வை. இரண்டு பேரும் எதிரும் புதிருமான அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட, உண்மையான கலைஞனை பாராட்ட வேண்டும் எனும் நோக்கத்தில் கமல் 60 விழாவில் வந்தமர ஸ்டாலின் சம்மதித்துவிட்டாராம். 
ஆனால் இப்படியொரு விழாவை நியாயப்படி செய்திருக்க வேண்டிய தென்னிந்திய நடிகர் சங்கமோ கமலை, கண்டும் காணாமலும் இருப்பது அதிர்ச்சி தருகிறது. இத்தனைக்கும் அதன் தலைவராக இருப்பவர், கமலின் நெருங்கிய நண்பரான நாசர். கமல் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருக்கும் கமீலாவின் கணவர்தான் நாசர். ஆனால் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே சினிமாத்துறையில் உள்ளோரின் வருத்தம், ஆதங்கம், கோபம். இந்த நிலையில்தான் ஐசரி கணேஷ் எடுக்கும் முயற்சி அவர்களை ஆசுவாசப்படுத்துகிறது! என்கிறார்கள். 
நாசரின் வளர்ச்சியில் கமலின் பங்கு பெரிது! தனது மிக  முக்கியமான படங்களில் நாசருக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து அவரது கிராபை வளர்த்துவிட்டவர் கமல்ஹாசன். ஆனால் அந்த நன்றியை நாசர் மறந்துவிட்டார்! என்று கரித்துக் கொட்டுகின்றனர் சினிமா துறையினர், சோஷியல் மீடியாவில். 


இந்த நிலையில் இந்த விவகாரத்தில், நாசரை வெளிப்படையாக சாடியிருக்கும் நடிகர் சங்கத்தின் மாஜி  மேலாளரான நடேசன் “சரத்குமார், ராதாரவி ஆகியோர் இன்று பதவிகளில் இருந்திருந்தால் நிச்சயம் கமல் கொண்டாடப்பட்டிருப்பார். இப்போது நாசர் இருக்கும் பதவியில் ராதாரவி இருந்திருந்தால், கமல்ஹாசனுக்கு பிரம்மாண்ட விழா எடுக்கப்பட்டிருக்கும். 
தேவர்மகன், அவ்வை சண்முகி, குருதிப்புனல், அன்பேசிவம், விஸ்வரூபம் உள்ளிட்ட தனது மிக முக்கிய படங்கள் உள்ளிட்ட பல படங்களில் நாசருக்கு முக்கிய ரோல்கள் கொடுத்து வளர்த்தவர் கமல். ஆனால் அந்த கமலின் கலைப்பணியை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு விழாவை நாசர் நடத்த முன்வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கமலுக்கு விழா எடுக்க நாசருக்கு எந்த தடையும் இருக்காது என நினைக்கிறேன். பின் ஏன் செய்யவில்லை?” என கேட்கிறார் சுருக்கென்று. 
நாசர் பதில் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். சினிமா கமலை பாராட்ட அரசியல் தலைவர் ஸ்டாலின் வருகிறார். இது அரசியல் கமலை குஷியாக்கி, தி.மு.க.வுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வைக்குமா?என்பது போகப்போக தெரியும்.