stalin criticize ops and eps

ஆர்.கே.நகரை தத்தெடுத்து அனைத்துவிதமான நலத்திட்டங்களும் இனிமேல் செயல்படுத்தப்படும் என்று கூறி, இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதை பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒப்புக்கொண்டுவிட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர்களிடமும் ஓபிஎஸ்-சிடமும் விசாரணை நடத்தப்பட்ட வேண்டும். உண்மை வெளிவர வேண்டுமானால் சிபிஐ விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். கடந்த முறை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தன் மீதான ஆட்சியாளர்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தான் மேயராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை வரிசைப்படுத்தினார். சென்னை மேயராக தான் பொறுப்பேற்றதும் முதலில் ஆர்.கே.நகர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்ததாகவும் சிமெண்ட் சாலை, மேம்பாலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் ஆர்.கே.நகரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியை தத்தெடுத்து இனிமேல், அனைத்துவிதமான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இதுவரை ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டனர் என விமர்சித்தார்.