நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தமிழக அரசு கபட நாடகம் போடுகிறது என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் தேர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று செய்தியாளரகளை சந்தித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தமிழக அரசு கபட நாடகம் போடுகிறது என தெரிவித்தார்.

மேலும், நீட் விவகாரத்தில் மாணவர்களின் நலனை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.