நடிகர் கமலிடம் ஆதாரம் இருக்கிறதா என கேட்டு மிரட்டும் அமைச்சர்கள், நான் ஆதாரத்தோடு பேசுகிறேன். என் மீது வழக்கு தொடர அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

குடியரசு தலைவருக்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. இதில், அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்து வருகின்றனர். இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில், இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்களித்தனர். தலைமை செயலகத்தில் வாக்களித்த பின்னர், மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பாஜக வேட்பாளரை எதிர்த்து, 17 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளது. இது எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு பிரகாசமாக இருப்பதாக அமைந்துள்ளது. திமுக சார்பில், ஜனநாயக உரிமையின் அடிப்படையில், வாக்களித்துள்ளோம்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், டாக்டர்களின் அறிவுறுத்தல்படியும் அவர் வாக்களிக்க வரமாட்டார். 

ஜனநாயக நாட்டில், வாக்களித்து அரசியல்வாதிகளை தேர்வு செய்யும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆட்சியாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு. அதுபோல் நடிகர் கமல் கூறிய கருத்துக்கு ஆட்சியாளர்கள் உரிய விளக்கமும், பதிலும் அளிக்க வேண்டும். அதை விடுத்து மிரட்ட கூடாது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.

நடிகர் கமல், தமிழக அரசியலில் ஊழல், முறைக்கேடு நடக்கிறது என கூறியது பொத்தம் பொதுவான வார்த்தை. அதில், அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தாலும், அதற்கான விளக்கத்தை அமைச்சர்கள் கொடுக்க வேண்டும். அவரை மிரட்டக்கூடாது.

கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர்கள், ஆதாரம் இல்லாமல் பேச கூடாது என கூறுகிறார்கள். நான் ஆதாரத்தோடு பேசுகிறேன். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆதாரங்களை சமர்ப்பித்து பேசுகிறேன். என்ன அதவர்களால் என்ன செய்ய முடியும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுள்ள ஊழல், முதல்வர் எடப்பாடி மீதுள்ள ஊழல், மாநகர கமிஷனர் மீதுள்ள ஊழல் என பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நான் வைத்துள்ளோன். வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் மூலம் பெறப்பட்டுள்ள ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

கமல் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டும் அதிமுக அமைச்சர்களுக்கு, என் மீது வழக்கு தொடர தைரியம் இருக்கிறதா. அப்படி வழக்கு தொடர்ந்தால், அதை நீதிமன்றத்தில் நான் சந்திக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.