stalin boycott assembly meeting
தமிழக சட்டமன்ற பட்ஜெட் மீதான விவாதம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது. அப்போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏ பண பேரம் பற்றி பேச அனுமதி கேட்டார். அதற்கு, சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தில் இருந்த வெளியே வந்த பின்னர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. அதுபற்றி அதிமுக எம்எல்ஏக்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் வெளிப்படையாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர்.
இதுபற்றி நேற்று சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் நான் கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி பேச சபாநாயகர் தனபால் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும், இதுபற்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அதை பற்றி பேச கூடாது என தெரிவித்தார்.
இதையடுத்து நாங்கள் குண்டு கட்டாக வெளியேற்றம் செய்தோம். நாங்கள் கேட்ட கேள்வி நியாயமானதே என கூறி, காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
அனைவரும் சட்டமன்றத்தில் நடந்ததை சுட்டிக்காட்டி சாலை மறியலில் ஈடுபட்டோம். இதனால், அனைவரும் கைது செய்யப்பட்டு ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டோம்.
நான் நேற்று கூறியதை போலவே, இன்றும் சட்டமன்றத்தில் அதே காரணத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினேன். அதற்கும், சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். இதனால், நங்கள் வெளியேற்றம் செய்துள்ளோம்.
சட்டவிதி 92/1ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பபட்ட பின்னர்தான் அதை பற்றி நாம் கருத்து கூற கூடாது. ஆனால், நாங்கள் தொடுத்துள்ள வழக்கு வரும் 16ம் தேதி (நாளை) எடுத்து கொள்ளப்படுகிறது. அதனால், அதை பற்றி பேச உரிமை இருக்கிறது என கூறினேன்.
ஆனாலும் அவர் என்னை பேசவிடாமல் மறுத்துவிட்டார். இதனை கண்டிக்கும் வகையில் எங்களது கண்டனத்தை தெரிவிக்கும் நிலையில் வெளிநடப்பு செய்துள்ளோம்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சரவணன், முதலில் அந்த வீடியோவில் வந்தது நான் இல்லை என கூறினார். பின்னர், அதில் இருந்தது நான்தான். ஆனால், அதில் பேசுவது என்னுடைய குரல் அல்ல. யாரோ டப்பிங் செய்துவிட்டனர் என முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதற்கு, சபாநாயகர் உரிய முறையில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை பேச வைக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை.
எங்களது கேள்விக்கு பதில் அளிக்க முடியாவிட்டால், தார்மீக பொறுப்பேற்று, இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து சபா நாயகர் பதில் சொல்ல வேண்டும்.
.jpg)
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி, நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும். இதை பற்றி நாங்கள் பேசுவோம் என கருதியே எங்களை பேச அனுமதிக்க மறுக்கிறார் சபாநாயகர் தனபால்.
89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு மாபெரும் எதிர்க்கட்சியாக இருந்து, அதை பற்றி நாங்கள் கேட்காமல் இருந்தால், மக்கள் எங்களை காரி துப்புவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை இல்லை.
ஆட்சியை பிடிப்பதற்காக பணம் பட்டுவாடா செய்த சம்பவம், தமிழகத்தையே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
