காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு முன் பலமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால், இறுதி தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தும் என நம்பப்பட்டது. ஆனால் இந்தமுறையும் மத்திய அரசு அலட்சியமாகத்தான் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய பொழுதிலும் அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. 

இந்நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் என்ன செய்யலாம் எனவும் முதல்வர் கேட்டார். தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மறுப்பது, ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமானப்படுத்தும் செயல். 

எனவே திங்கட்கிழமைக்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் வரவில்லை என்றால், சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம். அதை முதல்வரும் ஏற்றுக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லை என்றால், தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினோம். திமுக எம்பிக்கள் தயார். அதேபோல் அதிமுக எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.