பெரம்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது அவர், புத்தகங்கள் வாசித்துக் கொண்டும், திமுக தொண்டர்களிடையே அளவளாவிக் கொண்டும் இருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டத்தினை விவசாய சங்கத்தினர், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
சென்னை, பெரம்பூர் ரயில்வே ஆடிட்டோரியத்தில் இருந்து ரயில் நிலையம் நோக்கி திமுக பொருளாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஊர்வலம் சென்ற திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
திமுக ஊர்வலம் ரயில் நிலையத்தை நெருங்கும் சமயத்தில் அங்கு வந்த போலீசார், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, தாயகம் கவி, ரெங்கநாதன் உள்ளிட்டோரை கைது செய்தது. பின்னர் மு.க.ஸ்டாலினை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுடன் அளவளாவிக் கொண்டுள்ளார். அவர் புத்தகங்கள் படித்துக் கொண்டும் உள்ளார். கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் ரிலீஸ் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
