வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது.  இதில் நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

புயல் வருவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர். ஆனால் மீட்புப் பணிகள் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புயல் வந்து செனறு 4 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு போகவில்லை என அம்மாவட்டங்களில் உள்ள கொந்தளித்துப் போயுள்ளனர்.

நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை  வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்கள், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 61 நிவாரண முகாம்களில் 26,956 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.வீடு வாசலை இழந்து நின்ற மக்கள், தென்னை, வாழை முதலானவற்றையும் பயிர்களையும் இழந்த மக்கள், உடைமைகளை இழந்து நின்று தவிக்கும் மக்கள் முதலானோரை சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின்.

தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , புயல் நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில்  ரூ. 1 கோடி நிதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும்  நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்கள்,  எம்.பி.க்கள் தங்கள் 1 மாத சம்பளமும் அளிக்கப்படும்  என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட, கழகத்தின் சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.