காஷ்மீர் விவகாரத்தைக்கண்டித்து திமுக தலைமையில் டெல்லியில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த போராட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என அதிரடியாக கூறியுள்ளார்.  போராட்டம் நடத்தி ஸ்கோர் செய்ய திட்டமிட்டிருந்த  நிலையில் ப. சிதம்பரம் கைது சம்பவம்,  திமுக போராட்டத்தை புஸ்வானமாக்கிவிட்டது, எனவேதான் டெல்லி போராட்டத்திலுருந்து ஸ்டாலின்  நழுவிக்கொண்டார் என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அங்கு கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களையும் அரசியல் தலைவர்களையும், உடனே விடுதலை செய்ய வேண்டும்  என வலியுறுத்தி ஆகஸ்டு 22 ஆம் தேதி டெல்லியில் திமுக தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.  நாட்டில்  எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் ஒரு கட்சிக்கூட மத்திய அரசை கண்டிக்க முன்வரவில்லை.   திமுக மக்களுக்கான இயக்கம்.  மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்கு திமுகவின் குரல் ஒலிக்கும் என்று அறிக்கை அனுப்பிய கையோடு டெல்லியில் ஆர்பாட்டம்  நடத்தி ஸ்கோர் செய்யவும் ஸ்டாலின்  திட்டமிட்டிருந்தார்.

ஒருவகையில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இந்த போராட்டம் நாடு முழுவதும் காஷ்மீர் விவகாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும், ஊடகங்கள் சொல்லிவந்தன,  திமுகவின் ஆர்பாட்டத்திற்கு  பல்வேறு எதிர்கட்சிகளும் முன்வந்து ஆதரவு தெரிவித்தன.  இந்த போராட்டம் குறித்த தகவல் இந்தியாவில் மட்டும் அல்ல எல்லை கடந்து பாகிஸ்தானிலும் பிரபளமடைந்துள்ளது. எனவே போராட்டம் நடப்பதற்கு முன்பே இப்படி என்றால்  போராட்டத்தை நடத்தினால் திமுகவின் மதிப்பு எந்த அளவிற்கு உயரும்  என்றும்,  இனி ஒரு மாசத்துக்கு திமுகதான் ஹாட்டாபிக் என்றும் மிதப்பில் இருந்த ஸ்டானின் கனவில் இடியாக வந்து இறங்கியுள்ளது ப. சிதம்பரத்தின் கைது நடவடிக்கை.  ஆம், இப்போது நாடே ப.சிதம்பரம் கைது பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தையே மக்கள் மறந்து விட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு, ப. சிதம்பரம் என்ன செய்தார், அவர் எப்படி கைதானார், சிபிஐ அதிகாரிகள் அவரை  எப்படி மடக்கினர் என்பதைப் பற்றிய செய்திகளே காட்டுத்தீயாய் நாடுமுழுக்க பரவிவருகிறது. எனவே இப்போதைக்கு வேறு எந்த பிரச்சனையைப் பற்றி பேசினாலும் எடுபடாது என்பதை  உணரந்துகொண்ட ஸ்டாலின் டெல்லிப்போராட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை  என்றும் தங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் அந்த போராட்டம் நடக்கும் என்றுத் அறிவித்து அவர் மொத்தமாக நழுவியுள்ளார். தற்போதைக்கு சிதம்பரத்தின்  கைது பிரபளமாகிவரும் நிலையில் தன் போராட்டம் எடுபடாது என்பதால்தான் தளபதி போராட்டத்திலிருந்து விலகிவிட்டார் எல்லாம் அரசியல் தாங்க என தன் சொந்த கட்சிக்காரர்களே அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.