இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி  செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் 4 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு அக். 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியில் 23 பேரும் நாங்குநேரி தொகுதியில் 37 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை இன்று முடிவடைந்த நிலையில், வியாழன் அன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தியும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரியில் ரூபி மனோகரனும் போட்டியிடுகிறார்கள்.

 
இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் 4 நாட்களும், நாங்குநேரி தொகுதியில் 4 நாட்களும் பிரசாரம் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இடைத்தேர்தலில் 4 நாட்கள்  பிரசாரம் செய்ய உள்ளார். அக். 14, 15 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் 17,18 ஆகிய தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.