ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி என்ற அஸ்திரத்தை ஏவ பாஜக திட்டமிட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தொடர்ந்து வெளியாகும் பல கருத்துகணிப்புகளிலும் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிவாகை சூடும் என்றே தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணி வலுவடைய கூடாது என்பதே பாஜகவின் எண்ணம். திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியைக் கட்டமைக்கும் வேலைகளையும் திரைமறைவில் பாஜக தலைமை செய்து வருகிறது.

 

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெல்வதைத் தடுத்தால்தான், மீண்டும் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணி வலுவாக இருப்பதை அந்தக் கட்சியால் ரசிக்க முடியவில்லை. அதற்கேற்ப வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாஜக, திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அழகிரியை ஸ்டாலினுக்கு எதிராகப் பேச வைக்கும் உத்தியும் ஒன்று. 

கருணாநிதி உயிருடன் இருந்தபோதே 2014 நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவுக்கு எதிராக பல கருத்துகளை அழகிரி வெளிப்படுத்தினார். திமுகவுக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜக கூட்டணி கட்சியினர் சந்தித்தபோது அவர்களுக்கு ஆசி வழங்கி அனுப்பினார். கருணாநிதி இருந்தபோதே இதையெல்லாம் செய்த அழகிரிக்கு, ஸ்டாலினுக்கு எதிராக இதை செய்வது பெரிய விஷயமில்லை. மேலும் ஸ்டாலின் இருக்கும்வரை திமுக வெற்றி பெறாது என்ற இமேஜை தொடர்ந்து தக்க வைக்க அழகிரியும் விரும்புகிறார்.

பொதுவாக ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி பேசும் பேச்சுகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவதால், அதை வைத்தே ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் தற்போது பாஜக எடுத்துள்ள முடிவு. இதற்கிடையே அழகிரியை பாஜகவில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அழகிரி பாஜகவில் இணைந்தால், அத்தோடு திமுக தொண்டர்களிடமிருந்து அவர் முற்றிலும் விலக நேரிடும். மாறாக, தற்போதைய நிலையிலேயே ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியைப் பயன்படுத்த வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி என்ற அஸ்திரத்தை பாஜக வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.