வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் முடிகிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ள முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு லருகின்றனர்.

திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிற நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் அருகே உள்ள உமராபாத் என்ற இடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பிரசாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து பேசிய முதலமைச்சர்  பழனிசாமி, ‘ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட கட்சி திமுகதான் என்பதை மக்கள் எப்போதும் மறந்துவிடக்கூடாது என தெரிவித்தார்.

வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய். தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு முழுக் காரணம் திமுகதான். வேலூரில் கைப்பற்றப்பட்ட ரூ.10 கோடி ஊழல் பணம் தொடர்பாக வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

சதுரங்கவேட்டை திரைப்படத்தின் நாயகன் போல் ஆசை வார்த்தைகளை ஸ்டாலின் கூறிவருகிறார். அரசியலுக்கு வருவதற்காக தான் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இல்லையென்றால் அவரை மக்களுக்கு எப்படி தெரியும்? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.