Special View on Edappadi team and Dinakaran responsibility
நீட், அரசு ஊழியர் ஸ்டிரைக் என்று எல்லா பிரச்னைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழக அரசியலில் ஹாட் டிரெண்டிங் ஆகியிருக்கிறது அ.தி.மு.க. பொதுக்குழு. அப்பொதுக்குழுவில் அவர்கள் நிறைவேற்றும் தீர்மானங்கள் இருக்கட்டும். ஆனால் இந்த நிகழ்வை வைத்து அ.தி.மு.க.வின் தலையெழுத்தை பற்றி தமிழக அளவில் விவாதம் ஒன்று நிகழ்ந்து வருவதை அலட்சியம் செய்துவிட முடியாது...
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட நபர்களில் 95% பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். இது தினகரன் அணிக்கு ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, பொதுக்குழுவுக்குள் சென்றிருக்கும் நபர்களில் தங்களின் ஸ்லீப்பர் செல்களும் அடக்கம்! என்று கழக முக்கியஸ்தர்களுக்கு வாலண்டியராக போன் போட்டு சொல்லி கலங்க விட்டிருக்கிறது டி.டி.வி. அணி. தினகரம்னுக்கு நெருங்கிய புள்ளியாக கருதப்பட்ட தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டிருப்பது பலரது புருவத்தை உயர வைத்துள்ளது.
.jpg)
இந்நிலையில் தமிழக அளவில் ஒரு அலசல் துவங்கியுள்ளது. அது, அழைக்கப்பட்ட நபர்களில் 95% பேர் கலந்து கொண்டுவிட்ட நிலையில் அ.தி.மு.க. எனும் கட்சி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்த அணியின் பக்கமே இருப்பதாக கூறுகிறது ஒரு தரப்பு. என்னதான் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் ஃபிலிம் காட்டினாலும் கூட ஆட்சி அதிகாரம், தடை உடைத்து பொதுக்குழு நடத்தப்படும் பிரம்மாண்டம் ஆகியவற்றை பார்த்து அவர்கள் மிரண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். பொதுக்குழு நிகழ்வுகளை டி.வி.யில் விடாமல் சேனல் மாற்றி சேனல் வைத்து அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்களாம். அதேபோல் பொதுக்குழுவில் கலந்து கொண்டுள்ள தங்களது ஸ்லீப்பர் செல்கள் தரும் லைவ் தகவலையும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறார்களாம்.
பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் தினகரனின் ஸ்லீப்பர் செல்களும் அடக்கம் என்பதால், ஒருவேளை அவர்கள் அத்தனை பேரும் வந்துவிட்டால், மேடையில் தங்கள் அணியின் பேச்சு மிக தைரியமாகவும், மிரட்டலாகவும், ஆவேசமானதாகவும் இருக்க வேண்டும் என்று முதல்வர்கள் அணி திட்டமிட்டு உத்தரவிட்டிருந்ததாம். அது அப்படியே இன்று நிகழ்கிறது. இதையெல்லாம் கேள்விப்பட்டு தினகரன் அணி மிரண்டு நிற்பதால் கட்சியில் பெரும்பான்மை பழனிசாமி மற்றும் பன்னீர் வசமே இருக்கிறது என்கிறது ஒரு தரப்பு.

ஆனால் அதே வேளையில் அ.தி.மு.க.வின் இந்த ஆட்சியின் தலையெழுத்து தினகரனின் வசம்தான் இருக்கிறது என்று வேறு கோணத்தில் பேசுகிறது மற்றொரு தரப்பு. பொதுக்குழு நடத்த தடையில்லை! எனும் தீர்ப்பு வந்ததுமே தினகரன் “இந்த ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டோம்.” என்று முழங்கிவிட்டார். எனவே கட்சியில் பெரும்பான்மை வைத்திருப்பதன் மூலம் பழனிசாமி மற்றும் பன்னீரால் ஆட்சியை காப்பாற்ற முடியாது.
பொதுக்குழு நடந்தால் இந்த ஆடம்பரங்கள், அதிகார பேச்சுகள், சுண்டி இழுக்கும் தூண்டில்கள் எல்லாம் வந்து விழவே செய்யும்! ஆனால் அதற்கு நாம் மசிய கூடாது...என்று ஏற்கனவே தினகரனின் அணி திட்டமிட்டுதான் வைத்திருக்கிறதாம். அதனால் கூடிய விரைவில் ஆட்சிக்கு எதிரான பிரம்மாஸ்திரத்தை தினகரன் பயன்படுத்துவார்...என்கிறார்கள்.

ஆக கட்சி பெரும்பான்மை யார் பக்கம், ஆட்சியின் தலையெழுத்து யார் கையில்? என்று விவாதித்து அலசும் மேடையாக மாறி நிற்கிறது இன்றைய தமிழகம். இந்த அலசலை நொடி பிசகாமல் தி.மு.க.வும் கவனித்து வருவதே ஹைலைட்!
