பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது .  சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .  பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முழு தெருவையும் அடிப்பதை தவிர்த்து வைரஸ் தொற்று பாதித்த பகுதி அதாவது அடுக்குமாடி குடியிருப்பு இரண்டு மூன்று வீடுகளை கொண்ட பகுதிகளை மட்டும் தடுப்புகள் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது சுகாதார துறை அறிவித்துள்ள அனைத்து நடைமுறைகளையும் கடுமையாக்கி வைரஸ் தொற்று பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் . 

சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகள் உள்ள நபர்கள் மற்றும் முதியவர்கள் இதய நோயாளிகள் நீரிழிவு நோயாளிகள் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோரை கண்டறிந்து மருத்துவமனைகளுக்கு அல்லது பாதுகாப்பு மையங்களுக்கு அந்தப்  பகுதிகளில் பணியில்  ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை கொண்டு அழைத்துச் செல்ல மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கட்டுப்படுத்தப்பட பகுதிகளில் வசிக்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தன்னார்வலர்களைக் கொண்டு வழங்கிட வேண்டும் இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்பாடு செய்து தரவும் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மாநகராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்,  மேலும்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மறு பயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக் கவசங்கள் நாளை முதல் வழங்க இக்கூட்டத்தில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது . 

பெருநகர சென்னை மாநகராட்சியில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐந்தாயிரம் படுக்கை வசதிகள் கொண்ட 39  கோவிட் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன இவற்றில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உள்ள மையத்தில் 289 நபர்கள் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் 170 நபர்கள் லயோலா கல்லூரியில் 112 நபர்கள் சென்னை வர்த்தக மையத்தில் 444 நபர்கள் தேசிய திறன் பயிற்சி தொழில்நுட்ப மையத்தில் 39 நபர்கள் என மொத்தம் 1054 நபர்கள் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 115 நபர்கள் சுய விருப்பத்தின் பேரில் அவரவர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் இதுவரை 132 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .  இவர்கள் அனைவருக்கும் பொது சுகாதாரத் துறையில் அறிவுரையின்படி மூன்று வேலையும் தரமான சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது . 

இம்மையங்களில் நாள்தோறும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை தேவைப்படின் மருத்துவமனைகளுக்கு அனுப்ப இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது . இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் தொற்று பாதித்த 3 ஆயிரத்து 839 நபர்களில் 743 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மீதமுள்ள 3 ஆயிரத்து 50 நபர்கள் மருத்துவமனைகளிலும் கோவிட் காப்பு மையங்களிலும் உள்ளனர் இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து  திரும்பிய பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுவருகின்றன ஏற்கனவே 9- 5-2020 அன்று வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 358 பயணிகளில் 82 பயணிகள் ராயல் ரீஜென்சி ஹோட்டலிலும் 24 பயணிகள் ஹில்டன் ஹோட்டலிலும் மீதமுள்ளவர்கள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் விஐடி பல்கலைக் கழக விடுதியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .