ஒரு லட்சம் லட்சியம்! ஐம்பதாயிரம் நிச்சயம்: இடைத்தேர்தல் ஆட்டத்தை துவக்கிய வேலுமணி

தமிழ்நாட்டில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் பொண்ணுங்க போல இருபது தொகுதிகள் இடைத்தேர்தலுக்காக காத்திருக்கின்றன. இடை தேர்தல் இப்போது வருமா, நாடாளுமன்ற தேர்தலோடு வருமா? என்று ஆளாளுக்கு பட்டிமன்றம் நடத்திய நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் மற்றும் விளாத்திகுளம் என இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பணியை தாறுமாறாக துவக்கிவிட்டிருக்கிறா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

செயல்வீரர்கள் கூட்டம், ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் என்று சர்வ விதமான கூட்டங்களையும் ‘ஹுர்ரே!....’ என உசுப்பிவிட்டிருக்கிறார் மனிதர். தி.மு.க. இப்போதுதான் வாக்காளர்கள் லிஸ்டை எடுத்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்க, தனக்கு சம்பந்தமே இல்லாத மாவட்டமான தூத்துக்குடியிலும் உள்ளே புகுந்து வெளியே வருகிறார் அமைச்சர் வேலுமணி. தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் இன்னமும் தேர்தல் நடத்தை விதிகளும் துவங்கவில்லை. அதனால் இரண்டு தொகுதிகளிலும் மக்களின் தேவைகளை முடிந்தளவுக்கு மளமளவென மனிதர் முடித்துக் கொடுத்து வாக்காளர்களை கவர் பண்ணுகிறாராம். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவரான அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு அங்கே பல இடங்களில் எதிர்ப்புகள், பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் இவரே அந்த இடங்களுக்கு நேரடி விசிட் அடித்து, பிரச்னைகளை  கேட்டு எல்லாவற்றையும் மளமளவென சரிபண்ணுகிறாராம். இது போதாதென்று அ.தி.மு.க.வில் இருந்து விலகி அ.ம.மு.க. சென்றவர்கள், அ.தி.மு.க.வில் இருந்தபடி அதிருப்தியால் செயல்படாது இருப்பவர்கள் என அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணியில் தட்டி காயப்போடுகிறாராம். 

‘இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ரெண்டு தொகுதிகளுமே அ.தி.மு.க.வின் கோட்டைதான். இதுவரையில் நடந்த தேர்தல்களில் பாதிக்கும் அதிகமான தடவைகள் நம்ம கட்சிதான் இங்கே ஜெயிச்சிருக்குது. அதனால ரெண்டு தொகுதிகளிலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்துல வெற்றி பெற  லட்சியமெடுத்து உழைப்போம், அட்லீஸ்ட் ஐம்பது ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது ஜெயிப்போம்.’ என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். 

வேலுமணியின் இந்த திடீர் அதிர்வேட்டை பார்த்து அரண்டுதான் கிடக்கிறது தூத்துக்குடி தி.மு.க.