Asianet News Tamil

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்.. ஸ்டாலினுக்கு சவால்விட்ட எஸ்.பி.வேலுமணி.!

திமுக தலைவர் ஸ்டாலின், தினமும், நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4 கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும்தான், கொள்ளை நோய் கொரோனா காலத்தில் அவர் ஆற்றி வருகின்ற மக்கள் தொண்டாகும்.

SP Velumani challenged Stalin
Author
Tamil Nadu, First Published Jul 7, 2020, 4:25 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக தலைவர் ஸ்டாலின், தினமும், நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4 கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும்தான், கொள்ளை நோய் கொரோனா காலத்தில் அவர் ஆற்றி வருகின்ற மக்கள் தொண்டாகும்.

அதேவேளையில், உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களைப் பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு பகல் பாராது போராடி வருகிறார் எளிமைச் சாமானியர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ரஜினிகாந்த் கூட, ஊடகங்களில் இயல்பாகத் தோன்றுகிறார் என்றால், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினோ, அருவருப்பு அரசியலை அன்றாடம் தொடர்கிறார். மேலும், கொரோனா கொள்ளை நோய்க்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நிகழ்த்திவரும் தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல் அபிப்ராயத்தைப் பொறுக்க முடியாமல், வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி, நெறிமுறையற்ற அறிக்கைகளை நித்தம் ஒன்றாய் விடுத்து வருகிறார் ஸ்டாலின்.

அதிலும் இப்போது, அறிக்கை விடுவதற்கான காரணப் பஞ்சம் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்றம், நியமனங்கள் குறித்தெல்லாம் அறிக்கை விட்டு, அதற்காக அவர் சிபிஐ விசாரணை கேட்பதைப் பார்க்கும்போது, மனசாட்சி அற்ற காரியமாகவே தோன்றுகிறது. மத்திய அரசால், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரங்கள் முன்னோடித் திட்டத்தின் கீழ் அதிக அளவில் சீர்மிகு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதனை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. மாநில அரசு நிதியுடன் இணைந்து, 2015-ம் ஆண்டு தொடங்கி 2020 வரையில், 5 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரத்து 372.93 கோடி மதிப்பீட்டில் 11 சீர்மிகு நகரங்களில் 458 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய அரசு, ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவியும், அதற்கு இணையாக தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளித்து வருகிறது.

இதற்கான அதிக அளவான ஒப்பந்தப்புள்ளிகளும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் 2015-ம் ஆண்டு தொடங்கி, புகழேந்தி தலைமைப் பொறியாளர் நகராட்சி நிர்வாகத் துறைக்கு மாறுதல் அளிக்கப்படும் முன்பே 2019-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்துள்ளது. ஆனால், புகழேந்தி 2019-ம் ஆண்டு இறுதியில் தான் நகராட்சி நிர்வாகத் துறையில் முதன்மை தலைமைப் பொறியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். மு.க.ஸ்டாலின் தான் கூறும் குற்றச்சாட்டு புகாரில் ஆதாரம் இருக்கும் என்று அவர் நம்பினால், நிரூபித்தால், இன்றே என் பதவியினை முழுமனதுடன் ராஜினாமா செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதே போல, இன்றே மு.க.ஸ்டாலினும் தனது பதவிகளை ராஜினாமா செய்து அவற்றை மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போக வேண்டும். அவர் நிரூபித்துவிட்டால், ஜெயலலிதா வழங்கிய அதிமுக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய பதவிகளைத் துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார். இதற்குத் தயாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். பலமுறை இதனை நான் கேட்டும், ஸ்டாலின் பதிலளிக்கத் தயங்குவதேன்? பதுங்குவது ஏன்? எனவே, அவரது நியமனத்தையும், அவரது நியமனத்திற்கு முன்பே நடந்து முடிந்துவிட்ட ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடுகளையும் இணைத்து மு.க.ஸ்டாலின் பழிபோடக் கூடாது.

கடந்த திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித ஆக்கபூர்வமான திட்டங்களும் செயல்படுத்தப்படாத நிலையில், ஜெயலலிதாவின் அரசு உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அகில இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி அவதூறு பரப்பி வருகின்றார். இத்தகைய அவதூறுகளை தமிழக மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்துவதால், மக்கள் மன்றத்தில் தமிழக அரசுக்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற இமாலாய வெற்றிக்குப் பிறகு, இனி தமிழ்நாட்டு அரசியலில் திமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்துவிட்டதால், தமிழக அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், அரசியலில் தன் இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகளை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உச்சகட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார். எனவே, இதுபோன்ற மலிவான அரசியலை இனியும் தொடராமல், மு.க.ஸ்டாலின் தன்னைத் திருத்திக் கொள்வதுடன், அவதூறு அறிக்கைகளை வெளியிடாமல் இத்தோடு நிறுத்திக் கொள்வது, கரோனா காலத்தில் அல்லலுறும் மக்களுக்கு, அவர் செய்கின்ற பெரும் நன்மையாகும்” என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios