மாணவிகளிடையே தீவிரவாத அமைப்பு ஊடுருவி விட்டதாகவும், அதனால் தான் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி சேலத்தை சேர்ந்த வளர்மதி. இவர், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார்.

இதனால் நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டி இவரை கடந்த 13 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவரின் மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர், மாணவிகளிடையே தீவிரவாத அமைப்பு ஊடுருவி விட்டதாகவும், அதனால் தான் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் பாதுகாப்புக்காக ஒருவரை கைது செய்தால் அதை எதிர்ப்பதே எதிர்கட்சிகளின் வேலையாக உள்ளது என குற்றம் சாட்டினார்.