south indian chief ministers absent in karunanidhi birthday

'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!’ என்கிற சாட்டையடி குரலை கிளப்பி தென்னிந்தியாவை அரசியல் மற்றும் வளர்ச்சி ரீதியில் அமுக்கிட துடிக்கும் வட இந்திய லாபியை வலுவாக எதிர்த்த முக்கிய இயக்கம் தி.மு.க.தான்.

மாநில சுயாட்சி தத்துவங்களை மேடைக்கு மேடை பேசி தென்னிந்தியாவில் சுதந்திர அரசியல் காற்றின் வீச்சை உறுதிப்படுத்துவதில் கருணாநிதியின் பங்கு அலாதியானது.

இந்திராவுடன் கூட்டணியில் இருக்கும்போதும், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வுடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்த போதும் சரி, என்றுமே தென்னக உரிமை சித்தாந்தங்களில் சமரசம் செய்ததே கிடையாது கருணாநிதி. இந்த வகையில் தென்னிந்திய அரசியல்வாதிகள் தி.மு.க.வுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். 

அப்பேர்ப்பட்ட கருணாநிதியின் சட்டசபை வைரவிழா கொண்டாட்டத்திற்கு தென்னிந்திய முதல்வர்களில் நம்ம நாராயணசாமியை தவிர வேரு யாருமே கலந்துகொள்ளவில்லை என்பது அபத்தம். 

கருணாநிதியின் பிறந்தநாள் விழாவென்பது நிச்சயமாகவே பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு அதிகார மற்றும் அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி என்பது தேசத்துக்கே தெரியும். ஆனால் அதையும் தாண்டி பா.ஜ.க.வின் எதிரிகள் இதை புறக்கணிக்கிறார்கள் என்றால் அது புருவம் உயர்த்த வைக்கிறது. 

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் சித்தாந்த மற்றும் கொள்கை ரீதியில் பா.ஜ.க.வின் அழுத்தமான எதிரி. சீதாராம்யெச்சூரி வரும்போதிலும் முதல்வர் பினராயி வரவில்லை. காங்கிரஸுடன் அரசியல் கூட்டணியில்தான் இருக்கிறது தி.மு.க.

இருந்தாலும் கர்நாடக முதல்வரான சித்தராமையா வரவில்லை. பிரிக்கப்பட்ட இரு ஆந்திர முதல்வர்களில் ஹைடெக் செயல்பாடு மற்றும் வளர்ச்சி நோக்கிய முதல்வர் என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் சந்திரபாபுகாருக்கு சில விஷயங்கள் ஒத்துப்போகலாம். ஆனாலும் அரசியல் ரீதியில் வேறுபட்டுத்தான் நிற்கிறார்கள். அவரும் வரவில்லை.

சுதந்திரத்துக்கு பிந்தைய இந்திய அரசியல் தத்துவத்தை மிக தெளிவாக தெரிந்து வைத்திருப்பவர் சந்திரசேகர் ராவ். பெரும் போராளியான அவருக்கு மாநில சுதந்திரம் நோக்கிய கருணாநிதியின் போராட்ட குணம் நன்கு புரியும். ஆனால் ராவும் வரவில்லை. 

தமிழ்நாட்டில் உள் வாடகைக்கு தங்கியிருக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொள்வதில் ஆச்சரியமோ அரசியல் முக்கியத்துவமோ எதுவும் இருக்கப்போவதில்லை. ராகுல் காந்தி வரும் நிலையில் நாராயணசாமியும் வந்துதானே ஆவார். 

இதைத்தாண்டி உ.பி. முதல்வர் நிதீஷ்குமாரும், அதன் மாஜி முதல்வர் லாலுவும் வருகிறார்கள். இவர்களில் லாலு மட்டுமே பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனம். 

சோனியா வராத நிலையில் ராகுல் மட்டும் வருவது ’அழைச்சுட்டாங்களே , தலையை காட்டிட்டு வந்துடுவோம்.’ என்கிற சம்பிரதாய நடவடிக்கை மட்டுமே. காரணம், சோனியா மற்றும் கருணாநிதி இடையில் இருக்கும் பரஸ்பர நட்பு முதிர்ச்சியால் மட்டுமே இரு கட்சிகளுக்கும் இடையில் இன்னமும் கூட்டணி கயிறானது அறுபடாமல் இருக்கிறது.

தனித்து நின்று மோசமாக தோற்றாலும் கவலையில்லை, தி.மு.க. கூட்டணி வேண்டவே வேண்டாம் என்பதுதான் ராகுலின் எண்ணம். அப்பேர்ப்பட்ட ராகுல்காந்தி வருவதை சம்பிரதாய செயலாக சொல்லாமல் ஆத்மார்த்த பங்கேற்பு என்றோ, மைய அரசுக்கு எதிரான வீரிய அரசியலுக்கு விதைதூவ கைகோர்ப்பார் என்றோ நிச்சயம் எதிர்பார்த்துவிட முடியாது. 

பரூக் அப்துல்லாவும், மம்தாவின் பிரதிநிதியும் பங்கேற்பது தென்னகத்தில் நடைபெறும் ஒரு அரசியல் தலைவருக்கான பாராட்டு விழா மேடையில் ஆளுமை அலங்கரிப்பாக அமையும் என்பது கேள்விக்குறியே. ஆக தி.மு.க.வின் அழைப்புக்கு ‘அஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என்று செகண்ட் ஸ்டாண்டர்டு பையன் போல் லீவு சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கும் தென்னக முதல்வர்கள் தங்கள் நன்றியுணர்விலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம். 

இந்த விழாவில் பங்கேற்க விடாமல் அவர்களை தடுத்தது எது? பா.ஜ.க. மீதான பயமா! கருணாநிதி அமராத அவரது வைரவிழா மேடை அரசியல் ரீதியில் ஜொலிக்குமா என்கிற ஐயமா! ஸ்டாலின் தேசிய அரசியல் ஆளுமை குறித்த குழப்பமா! 
அவை எதுவென்ற முடிச்சுகள் இன்னும் சில தினங்களில் தெளிவாக அவிழும்.