sonia speech in delhi congress committe meeting
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் சேவைகளை புறக்கணித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் பாஜக அரசு ஆணவத்துடன் நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
டெலிலியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சோனியா காந்தி உரையாற்றினார்

அப்போது இந்தியாவில் அதிகம் பேர் நேசிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்றும் மற்ற எந்த கட்சிகளையும் விட காங்கிரஸ் கட்சிக்கே அதிக வாக்கு வங்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.
காங்கிரசில் உள்ள சில அம்சங்களால் பாஜக. ஆட்சிக்கு வந்து விட்டது. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் பாஜகவினரின் நடவடிக்கைகள் மிகவும் ஆணவமாக உள்ளன.
நாட்டுக்காக ஜவகர்லால் நேருவும், இந்திரா காந்தியும் செய்த சேவைகள், தியாகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அவர்களது அரசியல் பணி மறைக்கப்படுகிறது என சோனியா குற்றம்சாட்டினார்..
இதன் மூலம் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு இதில் வெற்றி கிடைக்கப்போவது இல்லை என தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பதில் சொல்ல துணிச்சல் இல்லை என்றும் அதனால்தான் அவர் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை எதிர்கொள்ள தயங்குகிறார் என்றும் சோனியா குற்றம்சாட்டினார்.
வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் தேவையான அளவுக்கு நடைபெறும். ஆனால் தற்போது குளிர்கால கூட்டத்தொடரை ஒரு வாரத்தில் முடக்க பாஜக சதி செய்வதாகவும், இதற்காக பொது மக்களுக்கு மோடி பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் சோனியா காந்தி கடுமையாக பேசினார்.
