மன்மோகன் சிங் பிரதமரானால் தனது மகன் ராகுலுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற காரணத்திற்காகவே அவரை சோனியா பிரதமராக்கியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருப்பது இப்போது ட்விட்டர் பக்கத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 'ஏ பிராமிஸ்ட் லாண்ட்' என்ற தலைப்பில், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி இருக்கிறார். அதில், தன் இளமைக் கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், அதிபராக இருந்தபோது தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் பற்றி எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்தியாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மன்மோகன் சிங் தனது பதவி காலத்தில், கண்ணியமான, ஊழலற்ற தலைவராக, தொலைநோக்கு பார்வை கொண்டவராக இருந்தார். நாகரிகமான மனிதர், சிறந்த அறிவாளி. இந்திய அமெரிக்க உறவை எச்சரிக்கையுடன் கையாண்டார். ஒரு முறை மன்மோகன் வீட்டு விருந்தில் பங்கேற்ற போது சோனியா, ராகுல் பங்கேற்றனர். அந்த சமயத்தில் ராகுல் பக்குவப்படாத தலைவராக இருந்தார்.

இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் மன்மோகன். சீக்கிய மதத்தில் இருந்து மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தவர். எந்த விதமான அரசியல் பின்புலமும் அவரிடம் இல்லை. அவரால் தனது மகன் ராகுலுக்கு எந்த பிரச்னையும் வராது என்பதாலும், ராகுலை வளர்க்கும் திட்டமும் சோனியாவிடம் இருந்தது. இதனால் தான், மன்மோகனை அவர் பிரதமராக தேர்வு செய்தார் என தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் இந்த கருத்து டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. மன்மோகன் சிங்கை பற்றி ஒபாமா எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார். இந்தியாவை அவர் வழி நடத்தி சென்ற விதம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த விஷயங்களை சுட்டிக்காட்டி அவரை பாராட்டி வருகின்றனர். அதேசமயம் அவர் பிரதமர் என்றாலும் சோனியா, ராகுலின் கைபாவை போன்றே இருந்துள்ளார் என விமர்சித்தும் வருகின்றனர்.