நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்று  இந்த அரசு திக்கு தெரியாமல் உள்ளது.  நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சமாளிப்பதற்கு பதிலாக மோடியும் அமித்ஷாவும் புள்ளி விவரங்களைத் திரிப்பதிலும் அவற்றை முழுமையாக வெளியிடாமல் இருப்பதிலும் தீவிரம் காட்டிவருகிறார்கள். 

மோடி-அமித்ஷா அரசு கண்ணியம் இல்லாதது என்றும் இந்த அரசு அதிகார போதையில் இருந்துவருகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்து ஆவேசமகப் பேசினர். “மகராஷ்டிராவில் ஜனநாயகத்தை தகர்த்தெறிய நடந்த வெட்கமில்லாத முயற்சிக்கு பின்னர் கூடி இருக்கிறோம். இதுவரை இல்லாத வகையில் ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்க விதத்தில் இருந்தது. பிரதமர், உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஆளுநர் செயல்பட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.


மகாராஷ்டிராவில் பாஜக தேர்தலுக்கு முன்பாக அமைத்த கூட்டணியானது பாஜகவின் ஆணவத்தாலும் அதீத நம்பிக்கையாலும் நிலைத்து நிற்காமல் போனது. அங்கே 3 கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க பாஜக எல்லா முயற்சிகளையும் அப்பட்டமாக செய்தன. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் மோடி, அமித்ஷா அரசு மொத்தமாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.