ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கு : மன்மோகன் சிங், சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த CBI முடிவு!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்த CBI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக, இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து, 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12 ஹெலிகாப்டர்கள் வாங்க, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், விமானப்படை முன்னாள் தளபதி S.P. தியாகி, அவருடைய உறவினர் சஞ்சீவ், வழக்கறிஞர் கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

மேலும், ஹெலிகாப்டர் பேர ஊழலில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கெல் என்ற தரகர் குறிப்பிட்டுள்ளதாக CBI தெரிவித்துள்ளது. இதையடுத்து, திரு.மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி ஆகியோரிடம் விரைவில் விசாரணை நடத்த CBI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.