திருமணமான பிறகு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருகிறார் சோனாலி பிரதீப். இந்தியாவின் எல்லா இடங்களிலும் நடக்கும் அழகிப் போட்டிகளில் மட்டுமல்ல... மொரீஷியஸ் சென்றும் மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் 2019 எர்த் உட்பட பல அழகிப் பட்டங்களை வென்று திரும்பியிருக்கிறார்.

சொந்த ஊர் கோவை, கவுண்டம்பாளையம். ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் மானேஜர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் என நிறைய கார்ப்பரேட் கம்பெனிகள்ல வேலை பார்த்திருக்கிறார். பூர்வீகம் குஜராத். ஆனால், தாத்தா காலத்திலயே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். கணவர் பெயர் பிரதீப் ஜோஸ். மலையாளப் படத் தயாரிப்பாளர். தமிழ்லயும் ‘கடிகார மனிதர்கள்’என்கிற ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். 

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது ஸ்கில் டெவலப்மென்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார். சரி அதெற்கென்ன இப்போது என்கிறீர்களா? யெஸ்... தமிழகத்திலேயே அழகான மேயர் வேட்பாளராக கோவையில் களமிறக்கப்பட இருக்கிறார் சோனாலி பிரதீப்.

சமீபத்தில் தான் அதிமுகவில் சேர்ந்தார் சோனாலி. மொரிஷியஸ் நாட்டில் நடந்த போட்டியில் பெற்ற அழகி பட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் காண்பித்து வாழ்த்தும் பெற்றார்.  கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரை போல தனது சமூக வலைதளப்பக்கங்களில் அதிமுக, வேலுமணி அறிப்புக்களை ரீட்விட் செய்து வருகிறார். இத்தனை தகுதிகள் இருந்தும் அம்மணியை அந்த ஆசை விட்டுவிடுமா? கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு சோனாலியும் விருப்ப மனு கொடுத்திருந்தார். இப்போது மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதால் சோனாலியை கவுன்சிலர் ஆக்கி அதன் பின் மேயர் ஆக்கவும் சிலர் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்.

சோனாலிக்கும், கோவை புறநகர் மாவட்ட எம்.ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகரின் மனைவி டாக்டர் ஷர்மிளாவுக்கும் கடுமையான போட்டி நிலவலாம் எனக் கூறப்படுகிறது.