கைக்கு எட்டிய மத்திய அமைச்சர் பதவி ஓபி ரவீந்திரநாத்துக்கு வாய்க்கு எட்டாமல் போனது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு கிடைத்த ஒரே ஒரு எம்பி அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் தான். இதனால் அவருக்கு எளிதாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் அதிமுக ஒருங்கிணைப்பாளரின் மகன் என்பதால் கேபினட் பதவி உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் இணை அமைச்சர் பதவிக்கு தான் வாய்ப்பு என்ற நிலையில் அதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு ஓபிஎஸ் வந்திருந்தார்.

ஆனால் அதிமுகவிற்கு இரண்டு மத்திய அமைச்சர்கள் பதவியை கொடுத்து ஒன்றை சீனியரான ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கும் இன்னொன்றை வேண்டும் என்றால் ரவீந்திரநாத்துக்கும் கொடுத்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி தரப்பு நெருக்கடி கொடுத்தது. ஆனால் இரண்டு மத்திய அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்று பாஜக கைவிரித்தது. அப்படி என்றால் எங்களுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட வேண்டாம் என்று எடப்பாடி தரப்பு கடுமை காட்டியதால் ரவீந்திர நாத்தால் மத்திய அமைச்சர் ஆக முடியவில்லை.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவிடம் இருந்து விலகி ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மேலும் அடுத்தடுத்த தோல்விகளால் முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சிகளை இழந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணியை வலுப்படுத்த கூட்டணிக்கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் கூடுதல் இடம் வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவசேனா எம்பி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதால் காலியான அமைச்சர் பதவியை வேறு ஒரு கூட்டணி கட்சிக்கு கொடுக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முதல் சாய்ஸ் அதிமுக என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுக தரப்பில் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பிடிப்பதற்கான ரேஸ் துவங்கியுள்ளது. ஓபிஎஸ் ஒரு படி மேலே சென்று மகனுக்காக அந்த மத்திய அமைச்சரவை இடத்திற்கு துண்டு போட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.