மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கையில் “தமிழக கவர்னர் விவகாரத்தில் தவறு இருக்கும் பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டியதுதான் அழகு. தைரியமான ஒரு அரசியல்வாதி தன் மீது குற்றச்சாட்டு வந்தால் அது தவறு என்று நிரூபிக்கும் வரையிலாவது பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.” என்று ஆரம்பித்து பொங்கி கொட்டியிருந்தார். 

ஆனால் அதே நிமிடம் அவரிடம் வைரமுத்துவுக்கு எதிரான பாலியல் புகார் குறித்துக் கேட்டபோது “அந்த் விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்தான் அதற்கு தகுந்த கருத்தை கூற வேண்டும். 3வது நபர், வேறு நபர் கருத்து கூற முடியாது.” என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார். 

இதை தொடர்ந்து கமல்ஹாசனை இணையவெளிகளில் விரட்டி விரட்டி வேட்டையாடுகின்றனர் விமர்சகர்கள், “ஏன் இதே கருத்தை கவர்னர் விஷயத்தில் நீங்கள் சொல்லவில்லை? அப்போது மட்டும் மூன்றாவது நபரான நீங்கள் கருத்து சொல்லி ‘பதவி விலகு’ என சொல்கிறீர்கள். 

ஆனால் உங்கள் துறையை சேர்ந்தவரும், உங்கள் நண்பரும், உங்களை போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதுபவருமான வைரமுத்து மீது மட்டும் கரிசனம் பொத்துக் கொண்டு வருகிறதோ? அவர் விஷயத்திலும் ‘தன் மீதான குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கும் வரையிலாவது பாட்டு எழுதாமல், இலக்கியம் பேசாமல், கவிதை எழுதாமல், பொது நிகழ்வுக்கு வராமல் கவிஞர் வைரமுத்து இருக்க வேண்டும்.’ என சொல்லியிருந்தால் நீங்கள் மய்யமானவர். 

ஆக கவர்னருக்கு ஒரு வாய், கவிஞருக்கு ஒரு வாய்! என்று நாக்கை புரட்டிப் புரட்டி பேசுவதன் மூலம் உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. உங்களிடமெல்லாம் ஆட்சியை கொடுத்தால், சுய விருப்பு வெறுப்பினால் மட்டுமே ஆட்சி நடத்துவீர்கள். 
நீங்கள் மாற்று அரசியல்வாதி இல்லை கமல்!” என்று வறுத்து தள்ளியுள்ளனர். 
உண்மைதானோ!?