அட்ராசிட்டி வில்லன் ரகுவரனை ரஜினி துவைத்து எடுத்தபோதெல்லாம் தன்னெழுச்சியாக கைதட்டியிருக்கிறோம். யதார்த்த வாழ்வில் நம்மால் சாதிக்க முடியாததை திரையில் ரஜினி செய்தபோதெல்லாம் அவரை சூப்பர் ஹீரோவாக நினைத்த நமக்கு, யதார்த்த வாழ்வில் அவரது தடுமாற்றங்கள் ஏன் அவ்வளவு பெரிய கிரிமினல்தனமாக தோன்றுகின்றன?....

இந்த கேள்விக்கு சிம்பிள் பதில் ‘பொறாமையே!’. 

உண்மைதான், காய்ச்ச மரம்தான் கல்லடிபடும். அதேபோல் எங்கிருந்தோ வந்து இந்த மண்ணில் எசகுபிசமாக முன்னேறிவிட்ட ரஜினிகாந்த் மீது உங்களுக்கு, எனக்கு, நம் நண்பர்களுக்கு என பலருக்கு பொறாமை இருக்கிறது. அவர் ஸ்கிரீனில் ஜொலிக்கையில் கைதட்டும் நம்மால், நம் கண் எதிரில் அவர் ஜொலிக்கையில் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறாமை ஒரு பக்கம் என்றால், ’ரஜினியையே கலாய்ச்சுட்டேன்ல!’ என்கிற கெத்துக்காகவும் பலர் அவரை விமர்சிக்கின்றனர். 

‘எந்த ஏழு பேர்?’ என்று அவர் கேட்டது அவ்வளவு பெரிய குற்றமோ, அசிங்கமோ, கேவலமோ, பொதுவாழ்வின் மீது அக்கறையின்மையோ இல்லை. இது எல்லோருக்கும் வருகின்ற சிறு தடுமாற்றம்தான். தான் பெற்ற மகனையே ஏதோ ஒரு ஞாபகத்தில் பெயரை மாற்றி தன் தம்பியின் பெயரை சொல்லிக் கூப்பிடும் எத்தனையோ  அப்பாக்கள் நம் குடும்பத்திலும் உண்டு. எழுபது வயதை கடந்துவிட்ட பெரியவரிடம்  எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென ‘7 பேர்’ என்றதும் சட்டென அவர் ராஜீவ் கொலையாளிகள் விஷயத்துக்குள் நுழைய வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நியாயம்?

அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர் இல்லை அவர். 'Search' பட்டனை அமுக்கியதும் தடதடதடவென சம்பந்தப்பட்ட தகவல்களை கொட்டிவிட. 

முந்தாநாள் தடுமாற்றத்திற்காக தன்னை வெச்சு செய்த மீடியா மற்றும் பத்திரிக்கைகளிடம் நேற்று மிக எளிமையாக, தெளிவாக தன்னை நியாயப்படுத்திவிட்டார் ரஜினி. ‘எதையோ பேசிட்டு இருக்கிறப்ப, திடீர்ன்னு 7 பேர்னு கேட்டதும்.தடுமாற்றமாயிடுச்சு. தெரியாததை, தெரியாதுன்னு சொல்லிடுவேன். இதுல வெட்கப்பட்ட ஒண்ணும் இல்லை.’ என்று எந்த ஈகோவுமில்லாமல் பேசியிருக்கிறார் அந்தப் பெரியவர். 
உண்மையை சொல்லுங்கள், ரஜினியின் சம வயதுடைய எத்தனை பேர் இன்னமும் அவர் அளவுக்கு உழைக்கிறீர்கள்? ‘அவர் மேக்கப் போடுகிறார்’ என்று சப்பக்கட்டு கட்டலாம் நீங்கள். தலைக்கு விக் வைக்கலாம், ஆனால் இன்னமும் தன் துறையில் தன் தலையெழுத்தை மிக உச்சத்தில்தானே மெயிண்டெயின் செய்கிறார்! அது அவரது வயதை தொட்ட எத்தனை பேரால் தங்கள் துறையில் சாதிக்க முடிகிறது!

எனவே ரஜினி கூறியிருப்பது போல் ‘எல்லாவற்றையும் இப்போது வீடியோ எடுக்கிறார்கள்.எனவே திரித்து எழுத வேண்டாம்.’ கூடவே, ‘ரஜினியையே திட்டிவிட்டேன்’ என்று முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று வீரத்தை வெற்றாக காட்ட வேண்டாம். அவர் அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழையட்டும், அதன் பிறகு பொது விஷயங்களில் அவருடைய ரியாக்‌ஷன்களை கவனித்துவிட்டு பின் ரியாக்ட் செய்யலாம். 

நினைவிருக்கட்டும் அந்தப் பெரியவர் சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் சொல்லும் அதே வேளையில் அவர் சூப்பர் கம்ப்யூட்டர் இல்லை! என்பது.