இந்து கோயில்களைப் பற்றி திருமாவளவன் பேசிய வார்த்தைகளெல்லாம் அறியாமலோ, ஒரு வேகத்திலோ வந்து விழுந்தவையல்ல! அதன் பின்னணியில் பெரிய திட்டமிடலும், அரசியல் சதியும் இருக்கிறது! என்று பொங்கி எழுகிறது தமிழக பா.ஜ.க. 

சமூக வலைதளங்களிலும் திருமாவை வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர். தங்கள் கூட்டணியில் இருக்கும் திருமா இப்படி பேசியிருப்பதால், ஏற்கனவே தி.மு.க.வை இந்து விரோதியாக சித்தரிக்கும் நபர்கள் இப்போது அதைவிட மிக மிக அதிகமாக விமர்சிக்கின்றனர் ஸ்டாலினையும். 

ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? என்று தி.மு.க. கேட்ட கேள்வியால் நொந்து போன திருமா ‘அவையெல்லம உரை வீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை. உண்மை உண்டு. எனினும் அதற்காக நான் வருந்துகிறேன்!’ என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். 

என்னதான் திருமா வருந்துவிட்டாலும் கூட அவரை விட்டு வைப்பதாக இல்லை இந்துக்கள். புதுச்சேரி மாநில இந்து முன்னணித் தலைவரான சனில்குமார் இது பற்றி பேசுகையில் “இந்துக்களை பற்றி தரக்குறைவான, மோசமான வார்த்தைகளை உதிர்ப்பதில் திருமாவுக்கு நிகர் அவரேதான். கலவி எனப்படும் செக்ஸானது வாழ்வின் ஒரு அங்கம். திருவள்ளுவரே உலகப் பொதுமறையாம் திருக்குறளில், அறத்துப்பால், பொருட்பாலுடன் காமத்துப் பாலையும்தானே தந்திருக்கிறார். 

கோயில் சிற்பங்கள் அசிங்கம் என்று சொல்கிறாரே திருமாவளவன், அப்படியானால் சில கோயில் கோபுரங்களில் அம்பேத்கார் சிலையும் இருக்கிறது. அப்படியானால் அதையும் அசிங்கம் என்று சொல்வாரா திருமா? ஐரோப்பாவின் சர்ச்களில் நிர்வாணப் படங்களும், ஆபாசமான சிற்பங்களும் உள்ளன. தைரியம் இருந்தால் அது பற்றி திருமா பேசட்டுமே பார்க்கலாம்.” என்று நறுக்கென கேட்டிருக்கிறார். 

ஆனால் தமிழக பா.ஜ.க.வோ திருமாவின் பேச்சை மீண்டும் வேறு கோணத்தில்தான் பார்க்கிறது. அதன் தமிழ் மாநிலச் செயலாளரான ராகவன் “ஸ்டாலினுக்கு எதிராக மிசா, பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு ஆகிய சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் திருமா இப்படி ஒரு புது சர்ச்சையை உருவாக்கிப் பேசி, ஸ்டாலினுக்கு எதிராக விஸ்வரூபமெடுக்கும் விவகாரங்களை திசை திருப்புகிறாரோ!? என்று சந்தேகிக்க வைக்கிறது.” என்றிருக்கிறார். 
ஆஹாங்!