’கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா’ என்கிற மிக தரமான, தேசிய சிந்தனை உடைய பாடலை எழுதியவர் கவிஞர் சிநேகன். சக மனிதர் மீதான விருப்பத்தை தெரிவிக்க, ‘கட்டிப்பிடித்தல்’ எனும் ஒரு சிஸ்டத்தையும் கொண்டு வந்து தமிழகத்தை தாறுமாறாக தெறிக்கவிட்டவர். இப்படியாக தனது டீமில் இணைவதற்கான எல்லா தகுதியும் சிநேகனிடம் இருப்பதால் அவரை தனது கட்சியில் சேர்த்து, இளைஞர் அணி செயலாளராகவும் ஆக்கியிருக்கிறார். 


தனக்கு இப்படியொரு வாய்ப்பு தந்த கமலை குளிர்விக்கும் முகமாக மக்கள் நீதி மய்யத்தில் அதிகப்படியான இளைஞர்களை இணைக்கும் திட்டத்தில் இருக்கிறார் சிநேகன். அதற்காக பதினான்காயிரம் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். செயற்குழு துவங்கி, வார்டு லெவல் வரை இளைஞர்களுக்கு  பதவிகள் வழங்கப்பட இருக்கின்றனவாம். இந்த சூழலில் பிரபல புலனாய்வு வாரமிருமுறை அரசியல் இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கும் சிநேகன் அதில் ’கமல்ஹாசனுக்கு பெண்கள் ஆதரவு இல்லை!’ என்று பிரஷாந்த் கிஷோரின் டீம் சர்வே நடத்தி சொன்னதாக வெளியான தகவலை மறுத்துப் பேசியிருக்கிறார். 


என்ன சொல்லியுள்ளார் தெரியுமா....”பெண்கள் மத்தியில் கமலுக்கு வரவேற்பு இல்லை என சொல்லப்படுவது உண்மையில்லை. முற்றிலும் தவறான பேச்சு. மிகப்பெரிய வரவேற்பு அவருக்கு பெண்களிடம் உள்ளது. சிறு குழந்தைகள், கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், பாட்டிகள் என்று அனைத்து தரப்பினரும் கமல் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். பெரும் ஆர்வத்துடன் தினமும் பெண்கள் எங்கள் கட்சியில் வந்து சேர்கிறார்கள். கமல் சாரின் ஆட்சி வரவேண்டுமென விரும்புகிறார்கள் பெண்கள். இப்படி இருக்கையில் அவருக்கு பெண்கள் ஆதரவு இல்லை!ன்னு சொல்வது அபத்தம்.” என்கிறார். 
சர்தான்.