சின்னம்மா இல்லாம கண்ணை கட்டுது: தினகரனிடம் வழிந்து கொட்டிய ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள்.

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இன்று பதினெட்டு தொகுதிகளுக்கும், அடுத்த மாதம் மேலும் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் இருபத்து ரெண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எடப்பாடியார் அரசாங்கம் தொடந்து வாழுமா? அல்லது தோல்வியுற்று வீழுமா? என்பதை நிர்ணயிக்கப்போகும் தேர்வு இது. 

என்ன விலை கொடுத்தாயினும் இடைத்தேர்தலில் வென்றே தீருவோம்! என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல சர்க்கஸ்களை செய்து முடித்திருக்கிறது ஆளும் தரப்பு. ஆனாலும் அமைச்சரவையிலேயே சிலருக்கு  ‘ஆட்சி கவிழ்ந்துடுமோ? மீண்டும் கட்சி சசிகலா கைகளுக்குள் போயிடுமோ?’ எனும் பயம் எழுந்துள்ளது. எனவே, எதற்கும் இருக்கட்டும் என்று இப்போதே தினகரனுக்கு போன் போட்டு தங்களுக்காக ஒரு துண்டை போட்டு வைத்துள்ளனர். மொத்தம் எட்டு அமைச்சர்கள் இப்படி சேம் சைடு கோல் போட்டுள்ளனர் என்கிறார்கள். 


விடிந்தால் தேர்தல்! எனும் நிலையில் நேற்று இரவில் அந்த எட்டு ஸ்லீப்பர் செல்களில் முக்கியமான சிலர் அடுத்தடுத்து தினகரனின் லைனுக்கு சென்று, பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார்கள். அவர்களில் இருவர்...”தலைவரே (ப்பார்றா!) இந்த வாட்டி தேர்தல் பணிகள் கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆகிடுச்சு எங்களுக்கு.

எப்பவும் அம்மா இருப்பாங்க, அதைத்தாண்டிக் களத்தில் எங்களை நடத்த தியாக தலைவி சின்னம்மா இருப்பாங்க. அவங்க சொல்ற படியும், உங்க கட்டளைப் படியும் (மறுபடியும் ப்பார்றா) நடப்போம், நம்ம கட்சி ஜெயிக்கும். ஆனா இந்தவாட்டி எங்களுக்கு திக்குமுக்காடி போச்சு. அதுலேயும் நீங்க அத்தனை தொகுதிகள்ளேயும் கொடுத்த சவால்...ரொம்ப பெருசுங்க. உங்களுக்கு என்னா கூட்டம், என்னா ஆரவாரம்.” என்று வழிந்து கொட்டி, உருகி ஓடிவிட்டார்களாம். 


இந்த வழிசல்களுக்கு தினகரன் காட்டிய நக்கல் சிரிப்பு இருக்குதே!....அதையெல்லாம் பார்த்தா ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமாரெல்லாம் எங்கூட்டு முகத்தை வெச்சுப்பாங்கன்னு தெரியலையாம். நடக்கட்டும், நடக்கட்டும்!