தனியார் ஆம்னி பஸ்களுக்கு  போட்டியாக சென்னை எழுப்பூரில் இருந்து ஏசி, ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகளை அரசு போக்குவரத்துறை இயக்கத் தொடங்கியுள்ளது. இங்கிருந்து நெல்லை,  கரூர்  மற்றும் போடிக்கு இயக்கப்படும் இந்த அரசுப் பேருந்தகள் சக்கைப் போடு போடுகின்றன.

தமிழகத்தில் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக சொகுசு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம்  கடந்த சில நாட்களாக இயக்கி வருகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, போடி, கரூர் உள்பட ஊர்களுக்கும், கர்நாடக, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அரசு ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

சாதாரண பஸ்களை காட்டிலும் சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ்களை ஐ.டி. பணியாளர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவர்கள் வசதிக்காக ஐ.டி. தொழில் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓ.எம்.ஆர். சாலை, வேளச்சேரி வழியாக போடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ்களை இயக்க எஸ்.இ.சி.டி. திட்டமிட்டது.அதன்படி போடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு ஏ.சி.படுக்கை வசதி பஸ்கள் புறப்படும் இடம், கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இங்கிருந்து கடந்த 4 நாட்களாக  அடையாறு, ஓ.எம்.ஆர். சாலை, வேளச்சேரி, தாம்பரம் வழியாக போடிக்கு இரவு 8.30 மணிக்கும், கரூருக்கு 9.30 மணிக்கும் அரசு ஏ.சி.படுக்கை வசதி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் எதிரில் இருந்து நேற்று முன்தினம் முதல் நெல்லைக்கும் ஏ.சி. படுக்கை வசதி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு இயக்கப்படும் இந்த பஸ் எழும்பூரில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, அசோக்நகர், கத்திபாரா, தாம்பரம் வழியாக நெல்லை செல்கிறது.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, போடி, கரூருக்கு செல்லும் அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கான முன்பதிவு சேவையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.கோயம்பேட்டில் ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம் இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் எழும்பூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தனியார் ஆம்னி பஸ்கள் வரிசையாக இயக்கப்படுகிறது. தற்போது இங்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக அரசு சொகுசு பஸ்களும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.

அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்களில் எழும்பூர்- நெல்லைக்கு ரூ.1,245ம், எழும்பூர்-போடிக்கு ரூ.1,060-ம், எழும்பூர்-கரூருக்கு ரூ.600-ம் கட்டணம் ஆகும். ‘ஆன்-லைன்’ முன்பதிவுக்கு ரூ.30 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.