நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் துரோகம் செய்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் தேனி தவிர்த்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலத்திலும் அதிமுக மண்ணைக் கவ்வியது. அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்திலும் தோல்வி அடைந்ததுடன் வாக்கு சதவீதத்தையும் கணிசமாக இழந்துள்ளது அதிமுக. இப்படி ஒரு தேர்தல் தோல்வியை எடப்பாடி சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியது முதலே கடும் அதிருப்தியில் இருந்த எடப்பாடி ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்து இந்த அளவிற்கு மோசமான தோல்வியை அடைவதற்கு என்ன காரணம் என்று கோபத்துடன் கேட்டுள்ளார். அதற்கு தேர்தல் பணிகளை அமைச்சர்களும் சரி அதிமுக நிர்வாகிகளும் சரி தீவிரமாக செய்யவில்லை. கடமைக்கு செய்துள்ளனர். கொடுத்த பணத்தில் பாதியை கூட செலவு செய்யவில்லை என்று புகார்களைக் எடப்பாடி எடப்பாடி உள்ளனர். 

அப்படி என்றால் இவ்வாறு நமக்கு துரோகம் செய்தவர்கள் யார் யார் என்று பட்டியல் தயார் செய்து தன்னிடம் கொடுக்கும்படி எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளையும் கட்சி நிர்வாகிகளையும் கேட்டுள்ளார். அதேசமயம் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றது ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்கிற மகிழ்ச்சி எடப்பாடியை சமாதானப் படுத்தி உள்ளது.

இதனையடுத்து அந்த தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக தொலைபேசியில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார் எடப்பாடி. வெற்றி ஈட்டிக் கொடுத்த அமைச்சர்களுக்கும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் மனம் மகிழும் படியான அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கும் என்று அதிமுகவில் பேசிக் கொள்கிறார்கள்.