நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அப்பதவியைப் பிடிக்க பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா  முயற்சி செய்துவருகிறது. 
மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இன்னும் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி சபாநாயகர் ஆவார் என்று தகவல்கள் உலா வருகின்றன. இதற்கிடையே துணை சபாநாயகர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வழக்கமாக அந்தப் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும். கடந்த முறை அதிமுகவின் தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்தார். இந்த முறை அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றுமா அல்லது அக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டி.ஆர்.எஸ். போன்ற கட்சிகளுக்கும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, துணை சபாநாயகர் பதவியைப் பிடிக்க ஆர்வம் காட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்சிக்கு 18 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.  இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வென்ற கட்சி சிவசேனாதான். எனவே எங்களுக்கு துணை சபாநாயகர் பதவி தரப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

 
வழக்கமாக கடைபிடிக்கப்பட்டுவரும் நடைமுறைபோல எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்படுமா அல்லது பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அந்தப் பதவியை பாஜக தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூட்டத் தொடர் தொடங்கிய பிறகு இதற்கு பதில் கிடைக்கும்.