இந்துத்துவா சித்தாந்தத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டேல் போட்டியின்றி தேர்வானார். பிறகு எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
 “பட்னாவிஸ் என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் நீண்ட காலமாக நல்ல நண்பர்களாக இருந்தோம். இதை எங்கே சொல்லவும்  நான் தயங்க மாட்டேன். அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அவருடன் எப்போதுமே நான் நட்பாக இருப்பேன். அவரை எதிர்க்கட்சி தலைவர் என அழைக்க எனக்கு விருப்பமில்லை.  அவர் ஒரு பொறுப்பான தலைவர். நான் இன்னும் ‘இந்துத்வா’ சித்தாந்தத்துடன் இருக்கிறேனா எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். நான் எப்போதும் அந்தச் சித்தாந்துத்துடன்தான் இருக்கிறேன். அதை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

 
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவுக்கு நான் துரோகம் எதுவும் செய்யவில்லை. நான் சட்டப்பேரவைக்கு வருவேன் என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், நான் தற்போது சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் ஆட்சி அமைப்பதற்காக என்னுடன் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், நண்பர்களாக இருந்தவர்கள் இந்த சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர சென்றுவிட்டார்கள்.
பாஜக எங்கள் பேச்சை கேட்டிருந்தால், இது எதுவுமே நடந்திருக்காது. இன்று சட்டப்பேரவையில் நடப்பதை நான் வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் பார்த்துகொண்டிருந்திருப்பேன். நான் நள்ளிரவில் எதையும் செய்ய மாட்டேன் என இந்த சட்டப்பேரவைக்கும் மகாராஷ்டிர மக்களுக்கும் உறுதியளிக்கிறேன். மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுவேன்” என்று உத்தவ் தாக்கரே பேசினார்.