என்சிபி, சிவசேனா கட்சிகளுடன் சேர்ந்து அமைக்க உள்ள கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், இன்று மூன்று கட்சிகளும் சேர்ந்து முடிவு எடுக்க உள்ளதால், இறுதியான முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. கூட்டணியை உறுதி செய்யப்பட்டால், டிசம்பர் 1-ம் தேதி சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு எனச் செய்திகள் தெரிவிக்கின்றன
.

மகாராஷ்டிராவில் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதால், இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 

பெரும்பான்மை இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியுள்ளன. ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும், என்சிபி கட்சியின் பிரதிநிதிகளும் புதன்கிழமை டெல்லியில் ஆலோசித்தனர்.

டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தின் முடிவில், மகாராஷ்டிராவில் என்சிபி, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது குறித்த இறுதி முடிவு நாளை (வெள்ளிக்கிழமை)எடுக்கப்பட உள்ளது. சிவசேனா, என்சிபி கட்சிகளுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்கக் காரியக் கமிட்டி கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. என்று தெரிவித்தார்.

இதற்கிடையே என்சிபி கட்சி வட்டாரங்கள் கூறுகயில் “ நவம்பர் 30-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி் அமையும். ஆட்சியில் சரிபாதியைப் பிரித்துக்கொள்ள சிவசேனாவும் என்சிபியும் சம்மதம் தெரிவித்துள்ளன. முதல் பாதியில் சிவசேனா தரப்பில் ஒருவர் முதல்வராகவும், இரண்டாவது பாதியில் என்சிபி தரப்பில் ஒருவர் முதல்வராகவும் இருப்பார். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், சபாநாயகர் பதவியும், 11 அமைச்சர்கள் பொறுப்பும் வழங்கப்படப் பேச்சு நடத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கின்றன.