கோழி முட்டையையும் சிக்கனையும் சைவ உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். 
நாடாளுமன்றத்தில் ஆயுஷ் மருத்துவத் துறை குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத்தின் பேச்சு இப்போது சமூக ஊடகங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. அசைவ உணவாகக் கருதப்படும் கோழி முட்டையையும் சிக்கனையும் சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதுதான் அவர் வைத்த கோரிக்கை. 
இந்த விவாதத்தில் சஞ்சய் ரெளத் பேசும்போது, “சில மாதங்களுக்கு முன்பு நந்துர்பர் என்ற பகுதிக்கு சென்றேன். அங்குள்ள பழங்குடியின மக்கள் எனக்கு ஆயுர்வேத சிக்கன் என்ற உணவைக் கொடுத்தார்கள்.  அந்த சிக்கனை சாப்பிட்டால், பல்வேறு உடல் கோளாறுகளை வராமல் தடுத்துவிடலாம் என்று என்னிடம் சொன்னார்கள். கோழிக்கு ஆயுர்வேத உணவுகளை கொடுப்பதன் மூலம் ஆயுர்வேத முட்டைகளும் கிடைக்கும். இதனால் சைவ பிரியர்களும்கூட ஆயுர்வேத முட்டைகளைச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்” என்று பேசியிருக்கிறார். 
சஞ்சய் ரெளத்தின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ரெளத்தின் பேச்சை பலரும் கிண்டலடித்துவருகிறார்கள்.