தனிக்கொடி உருவாக்கும் கர்நாடக முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்…. சோனியா காந்திக்கு சிவ சேனா வலியுறுத்தல்....

கர்நாடக மாநிலத்தக்கு என தனிக்கொடி உருவாக்க முயற்சிக்கும் முதல்வர் சித்தராமையாவை உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், வரலாற்றுக்கும் கட்சிக்கும் விரோதமாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சிவ சேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்துக்கு என தனிக்கொடி உருவாக்க சமீபத்தில் முதல்வர் சித்தராமையா 9 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டார். இதற்கு பா.ஜனதா தலைமையில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டுக்கு ஒரு கொடிதான் இருக்க வேண்டும் என்று வாதிட்டது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, தனது கட்சி நாளேடான ‘சாம்னா’வில் இது குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-

கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் மாநிலத்துக்கு தனிக்கொடி உருவாக்கும் முயற்சி என்பது, வெறுக்கத்தக்க செயல். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.

அதுமட்டுமல்லாமல்,  கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, நாட்டின் ஒற்றுமைக்கே சவால் விடுகிறது. நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகளையும், தேசியக் கொடியையும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களையும் அவமதிக்கும் செயல்.

சர்தார் வல்லபாய் படேல், அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்தார். ஆனால், சித்தராமையா அவரின் கட்சிக்கே விரோதமாக செயல்படுகிறார்.

கர்நாடகத்துக்கு என தனி  அடையாளத்தை உருவாக்க சித்தராமையா நினைக்கிறார். மற்ற முதல்வர்களைக் காட்டிலும், சித்தராமையா தனது மாநிலத்துக்காக அதிகமாக உழைத்துள்ளார், சிறப்பான திட்டங்களை தீட்டியுள்ளார். ஆனால், இதுபோன்ற ஆபத்தான கோரிக்கைகள் மூலம், அந்த சிறப்பான திட்டங்கள் எல்லாம் நீர்த்துப்போய்விடும்.

முதல்வராக இருந்து கொண்டு அரசியலைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படக்கூடாது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, சித்தராமையா அரசை கலைக்க வேண்டும். மாநிலத்துக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் ஒற்றுமையை பேச்சிலும், விளம்பரங்களில் மட்டும் வௌிப்படுத்தினால் போதாது.

நாளை கர்நாடகாவில் ஆளும் ஆட்சியாளர்கள் தனியாக அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துபோல்,  சிறப்பு அந்தஸ்து கேட்டு நாட்டை துண்டாடுவார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதில் உடனடியாக தலையிட்டு, முதல்வர்பதவியில் இருந்து சித்த ராமையாவை உடனடியாக நீக்கி, அவரின் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது